Friday 1 July 2016

டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணவழக்கு சிபிஐக்கு மாற்றம் - மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா மர்மசாவு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருச்செங்கோடு டிஎஸ்பியாக  பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். உயர் போலீஸ் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியின் காரணமாக அவர் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று அவரது தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார், ஆனால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டு விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து விஷ்ணுப்பிரியாவின் தந்தை  ரவி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் அமர்வு முன் விசாரணைக்கு ஏற்கப்பட்டு  நடந்து வந்தது. 

பின்னர் இந்த மனு அமர்வு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், எம்.வி முரளிதரன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சண்முகவேலாயுதம், ‘விஷ்ணுபிரியா சாவு குறித்து விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்  விசாரணை நன்றாக நடந்து வருகிறது. ஆகவே  இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று வாதிட்டார். 

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன் எதிர்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் விஷ்ணு பிரியாவின் தந்தை தமிழக போலீசார் விசாரித்தால் உரிய நியாயம் கிடைக்காது என்று வழக்கு தொடுத்துள்ளார், சமுதாயத்தின் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கிறது, ஒருவழக்கில் விசாரணை நடத்தும் போலீசார் அதே காவல்துறையை சேர்ந்த நபர் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அதை எப்படி அணுகுவார் என்பது கேள்விக்குரிய ஒன்று.

ஆகவே இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறோம், வழக்கு விபரங்களை சிபிசிஐடி போலீசார் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.மேலும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை மூன்று மாதத்திற்குள் முடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment