Monday 4 July 2016

நான் ஸ்வாதி பேசுகிறேன்- எனக்காக




நான் ஸ்வாதி பேசுகிறேன், ஏற்கனவே நன் பேசியதாக வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது என் நிலையை விளக்கவே நான் ஸ்வாதி பேசுகிறேன்.

என் நிலை என்னவென்று தெரியாமலே ஊடகங்களாலும், ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களாலும் , வழக்கை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போலீசாராலும் திரித்து விடப்படும் கட்டுக்கதைகளுக்குள் ஒளிந்திருப்பது என்ன?,  என்ற கேள்வி யாராலும் வைக்கப்படாத போது என் சார்பில் நானே எனக்காக பேச வேண்டியுள்ளது.

ஒவ்வொரு செய்திகளுக்கு பின்னும் ஒரு நோக்கம் இருக்கிறது, சமுதாய அழுத்தமும் , சாக்கடை எண்ணங்களும் இருக்கிறது என்பது என் விஷயத்தில் ஏனோ அழுத்தமாக பதிவாகி உள்ளது.

நான் திரும்ப வந்து பேசப்போவதில்லை என்பதால் என் மீது பரப்பப்படும் கதைகளுக்கு நான் பொறுப்பேற்க வேண்டுமா? குற்றம் நடக்கும் போதெல்லாம் இந்த சமுதாயம் எங்களுக்கு சொல்லித்தருவது நீ ஒழுங்காக நட, நீ ஒழுங்காக உடையணிந்திருக்க மாட்டாய், நீ சிரித்து பேசியிருப்பாய், நீ ஏன் அவன் காதலை மறுத்தாய், நீ நாகரீகமாக உன் மறுப்பை சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? நீ அப்படி நடந்திருக்க வேண்டும் இப்படி நடந்திருக்க வேண்டும், இப்படி அமர வேண்டும், இப்படி பேச வேண்டும் என்றுத்தானே புத்திமதி சொல்கிறீர்கள்.

என்னுடைய வழக்குக்கு வருவதற்கு முன்னாள் நான் சில கேள்விகள் வைக்கிறேன் சற்றே உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த மரபு ரீதியாக தொடரும் ஆணாதிக்க எண்ணங்களை ஓரளவு தள்ளி வைத்துவிட்டு தயவு தாட்சண்யமில்லாமல் பதில் சொல்லுங்கள் என் சகோதரர்களே.

சகோதரர்களே என்று சொல்வதற்கும் காரணம் உண்டு.நாங்கள் அணிகின்ற அதே உடை, நடை , பாவனை எல்லாம் இருந்தும் உங்கள் சகோதரிகளுக்காக உங்கள் பக்கம் சிறு நியாயம் இருக்கும், அது அண்டை வீட்டு பெண்களாக இருக்கும் போது மாறும்.

உங்களில் எத்தனை பேர் எங்கள் போன்ற பெண்கள் உங்களை மோட்டார் சைக்கிளில் முந்தி செல்லும் போது சகித்து ஒதுங்கியுள்ளீர்கள். உங்களில் எத்தனை பேர் ஒரு பெண் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து வந்தால் அதை விமர்சிக்காமல் குறைந்த பட்சம் அதை சாதாரண நிகழ்வாக எடுத்துள்ளீர்கள். 

உங்களில் எத்தனை பேர் உங்களுடன் பணியாற்றும் பெண்ணுக்கு உரிய வாய்ப்பை வழங்க முயற்சித்துள்ளீர்கள், உங்களில் எத்தனை பேர் பாலியல் வன்முறை செய்திகளை படிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உண்மையில் வருந்தியுள்ளீர்கள்.

இதென்ன இது போன்ற கேள்விகள் இதெல்லாம் ஒரு கேள்வியா என்று கேட்கலாம், ஆனால் இதில் கூட உங்களில் எத்தனை பேருக்கு உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அந்த ஆண் என்ற காலாகாலமான எண்ணங்களை உங்களை அறியாமல் நீங்கள் வளர்த்து வருவதை உணரலாம்.

ஆடி கார் ஓட்டி ஒரு பெண் ஒரு ஆளை கொன்றது பற்றி என்ன பரபரப்பாக பேசுகிறீர்கள். அவளுக்குரிய தண்டனை கிடைத்த பின்னரும் அவளைப்பற்றிய புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள். ஆனால் குடிபோதையில் பிளாட்பாரத்தில் தூங்கிய அப்பாவிகள் மீது காரை ஏற்றி கொன்ற சல்மான்கான் போன்றவர்கள் மார்க்கெட் இல்லாமலா போய்விட்டார்கள்.

எத்தனையோ குடிபோதை விபத்துகள் நடக்கிறது. ஆனால் இது மட்டும் பெரிது படுத்தப்படுகிறது. ஏன் அவள் பெண் என்பதால் தானே. மது அருந்துவதும், அதன் பின்னர் வாகனத்தை ஓட்டுவதும் ஏற்றுகொள்ள முடியாதது. ஆனால் மது அருந்தி வாகனம் ஓட்டி சிக்கிகொண்டு செல்வாக்கால் தப்பித்தவர்கள் கூட ஆடி கார் விபத்தை கடுமையாக விமர்சிப்பதன் பின்னணி என்ன.

இதை ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்று கேட்கலாம். இது போன்ற மனோபாவங்கள் மூலம் தான் என் போன்ற பெண்களின் மரணங்கள் பார்க்கப்படுகிறது என்பதை உணர்த்தவே இந்த கேள்விகளை முன் வைத்தேன்.

ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள், 23 வயதில் அவளுடைய வாழ்க்கை அநியாயமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்கிற உரிமை சாதாரண விலங்குகளுக்கு கூட அளிக்க வேண்டும் என நாம் பேசி வரும் காலத்தில் யாருக்கும் கெடுதல் செய்யாத எனது வாழ்க்கையை வாழ எனக்கு உரிமை இல்லையா.

என் போன்ற பெண்களுக்கு நடுச்சாலையில் பொதுவெளியில் அளிக்கப்படும் மரணங்களுக்கு காதலும், கள்ளக்காதலும் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என எப்படி சிந்திக்கிறீர்கள். அவன் 3 மாதங்கள் பின் தொடர்ந்தான் காதலை சொன்னான் மறுத்தாள் அதனால் வெட்டினான்.

தேவாங்கு என திட்டினாள் அதனால் வாயிலேயே வெட்டினான். இது போன்ற பரப்பப்படும் ஆதாரமற்ற செய்திகளுக்கு உணமைத்தன்மையை தேடினீர்களா? நான் திரும்ப வந்து பேசப்போவதில்லை என்பதால் இது உண்மையாகிவிடும்.ஆனால் ராம்குமார் என்பவன் பேசவே இல்லையே. 

அவன் வாக்குமூலம் தருவதற்கு முன்னரே அவன் சொன்னதாக சொல்லப்படும் , பரப்பப்படும் கதைகளை மறுத்து ஏன் இதன் பின்னால் காதல் தான் இருக்க வேண்டுமா?,  வேறு காரணம் எதாவது ஏன் இருக்க கூடாது என்று ஏன் நினைக்க மறுக்கிறீர்கள் காரணம் இந்த செய்தியில் தான் கிளுகிளுப்பு இருக்கிறது.

மூன்று மாதங்கள் பின் தொடர்ந்தால் ஒருவனுக்கு கொலைவெறி வருமா? , அப்படி கொலை செய்பவன் இப்படித்தான் திட்டம் போட்டு செய்வானா?, வறுமையில் வாடும் ஒருவன் சென்னை வந்த மூன்று மாதத்தில் என் பின்னால் வந்திருக்கலாம் , ஆசைப்பட்டிருக்கலாம் ஆனால் கொலை செய்ய நினைப்பானா? அதற்கு என்ன சரியான காரணம்?

கோபம் வருபவன் கையில் கிடைப்பதை கொண்டு குத்துவான், ஆசிட் ஊற்றுவான். ஆனால் திட்டம் போட்டு ஊரிலிருந்து அரிவாளை கொண்டு வந்து பதற்றமின்றி வெட்டுவானா? அதன் பின்னர் திட்டமிட்டபடி சரியாக தப்பித்து செல்வானா?

நானும் அவனும் பேசினோம் பழகினோம், சாட்டிங் செய்தோம், வாட்ஸ் அப்பில் பேசினோம் என்றெல்லாம் வழக்கை திசைத்திருப்ப திரித்து விடப்படும் கதைகளில் பேசிப்பழகியதற்கு என்ன ஆதாரத்தை வைத்துள்ளீர்கள் என்று யாராவது கேட்டீர்களா? செய்திக்கு கிளுகிளுப்பாக இருக்கிறது என்பதற்காகவும் நான் என்ன செய்வது நான் எழுதாவிட்டால் அவர் எழுதுகிறார் இதில் நான் மட்டும் சும்மா இருப்பதா என்ற எண்ணம் தானே உங்களை எழுத தூண்டுகிறது.

நான் அப்படி பழகியிருந்தால் அதே ரயில் நிலையத்தில், சாலையில் எத்தனையோ கண்கள் எங்களை பார்த்திருக்கும், என் நண்பர்களுக்கும் அது தெரிந்திருக்கும் யாராவது அதை உறுதி படுத்தினார்களா? அல்லது உறுதி படுத்தவேண்டும் அதன் பின்னர் காதலிருந்தது, தேவாங்குன்னு சொன்னாள் என்று திட்டினால் என்பதை நம்பணும் என்று உங்களுக்கு தோன்றியதா?

இந்த விஷயத்தில் போலீசாரின் புலனாய்வு எப்படி இருந்தது என்பதற்கு சிறு உதாரணம் என்னை வெட்டிய ராம்குமார், அதன் பின்னர் ரூமை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு போய்விட்டான். அப்படியானால் அவன் தலைமறைவு. 

கொலை நடந்த பின்னர் லாட்ஜுகளில் மேன்ஷன்களில் சோதனையிட்டோம் என்று சொல்லும் போலீசார் கொலை நடந்த அன்றிலிருந்து சூளைமேட்டில் உள்ள லாட்ஜுகளிலிருந்து எத்தனை பேர் ரூமை காலி செய்துள்ளனர் என்ற விபரத்தை 25, 26 தேதிகளில் கூட எடுத்திருந்தால் ராம்குமார் என்பவன் சிக்கியிருப்பானே?

ஆனால் சிசிடிவு கேமரா பதிவு காட்சிகளை வைத்து அந்த மேன்ஷன் வழியாக கேட்டுகொண்டு போகும்போதுதான் வாட்ச் மேன் இவனா இவன் தான் ராம்குமார், 24 ந்தேதி ரூமை பூட்டிவிட்டு போனவன் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார். இப்படித்தான் இருக்கிறது புலனாய்வு.

தொண்டையில் வெட்டுபட்ட ராம்குமார் பேசக்கூட முடியாது என்று நெல்லை மருத்துவ மனை தலைமை மருத்துவர் கூறுகிறார். ஆனால் நாம் பலரும் ஸ்வாதி என்னை அலட்சியப்ப்டுத்தினால் அதனால் கொன்றேன் ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் என்று எழுதுகிறோம் நம்புகிறோம். இப்படி போகும் வழக்கில் ராம்குமார் கொலை செய்த காரணத்தை முன் கூட்டியே அவன் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னரே பரப்பவேண்டிய அவசியம் என்ன.

ஏன் ராம்குமார் கூலிப்படை  கையாளாக இருக்க கூடாது? என்னை கொலை செய்து செல்போனை எடுத்து செல்ல அவனை ஏன் யாராவது அனுப்பி இருக்க கூடாது? ரத்தகறை சட்டையுடன் ராம்குமார் சாலையில் சென்றிருக்க முடியுமா? அல்லது மேன்ஷனுக்குள்தான் போயிருக்க முடியுமா? மேன்ஷனில் உடனிருந்தது யார்? இப்போது அவர் எங்கே? இது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதி யார் சொல்வது. 

போங்க அடுத்து நந்தினி என்ற பெண் விபத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டாள் அதில் அவள் ஏன் ஸ்கூட்டியை ஓட்டணும் , எதற்கு துரத்தணும் என்பது போன்ற அறிவுபூர்வமான கேள்வியை எழுப்புங்கள். என் வழக்கு ஒரு தலைக்காதல் வழ்க்காகவே முடித்து வைக்கப்படட்டும்.





No comments:

Post a Comment