Tuesday 14 June 2016

மார்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூடியது - 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 2 நாள் தமிழ் மாநிலகுழுக் கூட்டம் சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி. ராகவலு, மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி.சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல்நாள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. 

1. தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்தவேண்டும்.தமிழகத்தில் 2016-17 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிகள், கல்லூரிகளில் நடந்து வருகின்றன. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதன் அருகமை பகுதியில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று மத்திய கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவிகிதம் ஏழைக் குடும்பத்து மாணவர்கள் இடஒதுக்கீட்டு சலுகையின் அடிப்படையில் சேர்க்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென்றும், மாணவர்கள் சேர்க்கை குறித்து பள்ளிகளின் தகவல் பலகையில் வெளிப்படையான அறிவிப்பு செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. கல்வி கட்டணம் என்ற பெயரால் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் 

2. நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500/- விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வேளாண் விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை அடிப்படையில் உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவிகிதம் உயர்த்தி விலை வழங்கப்படும் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்து ஆட்சியை கைப்பற்றிய பிஜேபி தற்போது அதற்கு மாறாக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,500/- விலை  கிடைக்கச் செய்திட வேண்டும்.

3. ஊடகங்கள் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெறவேண்டும்.
முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக  நக்கீரன் இதழின் மீது சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இது, அதிமுக அரசு, விமர்சனங்களை ஒடுக்குகிற தன் நடைமுறையை மாற்றிக் கொள்ளாது என்பதைத் தெளிவாக்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் எதிர் கட்சி தலைவர்கள் மீதும், பத்திரிகைகள் மீதும் சுமார் 190 அவதூறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஏற்கனவே உச்சநீதிமன்றம், பெரும்பாலான அவதூறு வழக்குகள் தமிழகத்திலிருந்து தான் வருகின்றன என்று சுட்டிக்காட்டியதோடு, சொல்லப் பட்ட கருத்துக்கள் அரசு மீதான விமர்சனமே தவிர தனிநபர் மீதான விமர்சனமாகத் தெரியவில்லை என்று தெரிவித்தது. மேலும்  அப்படி தனிநபர் பாதிக்கப் பட்டால் அந்த நபர் தானே போட வேண்டும், ஏன் அரசு சார்பில் வழக்கு பதியப்படுகிறது என்றும் தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேட்டிருக்கிறது. ஜனநாயக ரீதியாக வெளியிடப்படும் கருத்துக்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் இப்போக்குக்கு எதிராக வலுவான கண்டனத்தை பதிவு செய்கிறது. அவதூறு வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்துகிறது.

4. மனித உரிமை மறுக்கப்படுவதை கண்டித்து
இத்தகைய கருத்தியல் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, மூத்த பெரியாரிய சிந்தனையாளரும் செயல்பாட்டாளரும் 80க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியருமான எஸ்.வி.ராஜதுரை பற்றிய ஆவணப்படம் திரையிடலுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இப்படி செய்வதன் மூலமாகவே மாற்றம் குறித்த சிந்தனைகளுக்குப் பூட்டு போட்டு விடலாம் என்று அரசு நினைத்தால், அதை விட மாயை வேறு எதுவும் இருக்கமுடியாது.
பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதைப் போல, அரசு ஒடுக்குமுறையில் ஈடுபடும் போது, காவல்துறையின் ஒரு பகுதியும் அதே பாணியைப் பின்பற்றுகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயன், எழுத்தாளர் துரை குணா இருவரும் கரம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவானந்தம் என்பவரிடம் பொய் புகார் ஒன்றை வற்புறுத்திப் பெற்று அதன் அடிப்படையில் கைது நடவடிக்கை நடந்திருக்கிறது. ஆய்வாளரின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு செய்யப் பட்டதில் இவர்களுக்குப் பங்கு இருக்கிறது என்பதும், கள்ளச்சாராயத்துடனும், சாதியத்துடனும் ஸ்தல காவல்துறை  சமரசம் செய்து கொள்வதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தினார்கள் என்பதும் தான் இவர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதன் பின்புலம். இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இப்பிரச்னையை விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது. கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறது.

5. ஆந்திராவில் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் வழக்கு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக
ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ந் தேதி செம்மரக்கடத்தலை தடுக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் உட்பட 20 பேர் ஆந்திர காவல் மற்றும் வனத்துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திர உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு போதிய சாட்சியங்கள் இல்லையென்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையேற்று வழக்கை முடிக்கலாம் என்று ஆந்திர மாநில அரசும் பரிந்துரை செய்துள்ளது. ஆந்திர மாநில அரசின் இந்த நடவடிக்கையை மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 
தமிழக அரசு, உடனடியாக தனது ஆட்சேபனையை ஆந்திர மாநில அரசுக்கு தெரிவிப்பதுடன், இந்த வழக்கை மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை வற்புறுத்த வேண்டுமென தமிழக அரசை சிபிஐ(எம்) மாநிலக்குழு கோருகிறது. இவ்வாறு சிபிஎம் மாநிலக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

.

No comments:

Post a Comment