Saturday 18 June 2016

கட்சிக்குள்ளும்,குடும்பத்திலும் சிண்டுமுடியும் வேலை வேண்டாம் - ஒ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் பதில்


கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் கழகத்திற்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையிலே சிண்டு முடியும் வேலையில் ஓபிஎஸ் இறங்கியிருப்பது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றதல்ல என மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
17-6-2016 அன்று நான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தலைவர் கலைஞருக்கு அவையில் கோரிய இருக்கை ஒதுக்கப்படவில்லை என்றும், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க.வுக்கு அவையில் ஆளுநர் உரை மீது பேச ஒவ்வொரு நாளும் மூன்று பேருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்றும், பேரவை வளாகத்தில் முறைப்படி எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய அறை 89 உறுப்பினர்கள் அமர்வதற்கு ஏற்ற இடமாக அளிக்க வேண்டுமென்றும், ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கடைசி நாளன்று முதல்வர் பதிலுரை ஆற்றுவதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் பேசுகின்ற மரபு தொடரப்பட வேண்டுமென்றும் கழகத்தின் சார்பில் பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.கழகத்தின் இந்தக் கோரிக்கைகளுக்கு பேரவைத் தலைவர் உரிய தீர்வு காணாவிட்டால், தலைவர் கலைஞருடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் கூறி, அனைத்து நாளேடுகளிலும் எனது பேட்டி வெளிவந்துள்ளது.
ஆனால் எனது கோரிக்கைகளுக்கு பேரவைத் தலைவர் உரிய பதில் அளிப்பதற்கு முன்பு, அவை முன்னவர், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவரின் அதிகாரத்தை தன் கையிலே எடுத்துக் கொண்டு, நான் கொடுத்த பட்டியலில் என் தந்தையின் பெயர் இல்லை என்றும், தந்தைக்கும் தனயனுக்கும் உள்ள போட்டிதான் காரணம் என்றும் கழகத்திற்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையிலே சிண்டு முடியும் வேலையில் இறங்கியிருப்பது, அவர் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றதல்ல.
பொதுவாக அமைச்சர் பன்னீர்செல்வம் இப்படியெல்லாம் அறிக்கை விடக்கூடியவர் அல்ல. இருந்தாலும் யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு கொடுத்திருப்பதைப் போலத்தான் தெரிகிறது.தந்தைக்கும், தனயனுக்கும் இடையே போட்டி என்றெல்லாம் பன்னீர்செல்வம்மும், அவர்களை ஆதரிக்கும் ஒரு சில நாளேடுகளும் தொடர்ந்து சொல்லி வருவது முற்றிலும் தவறான செய்தியாகும். கழகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் இவ்வாறு மேற்கொள்கின்ற முயற்சி வெற்றி பெறாது.
பேரவையில் தி.மு.கழகத்தைச் சேர்ந்த எந்தெந்த உறுப்பினர்களுக்கு எங்கு இடம் ஒதுக்க வேண்டுமென்று நான் கொடுத்த பட்டியலில் தலைவர் கலைஞரின் பெயர் இடம் பெறவில்லையே ஏன் என்று கேட்டிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு, அவரது உடல் நலத்திற்கு ஏற்ற இடம் ஒதுக்கப்பட வேண்டுமென்று பேரவைத் தலைவருக்கு எங்கள் கட்சியின் “கொறடா” சக்கரபாணி மூலமாக தனிக்கடிதம் ஒன்று பேரவைத் தலைவரிடம் தரப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தை நான்தான் தலைவரிடம் காட்டி, அவர்களுடைய ஒப்புதலுடன்தான் எங்கள் கட்சியின் கொறடா சக்கரபாணி மூலமாக பேரவைத் தலைவரிடம் தரப்பட்டிருக்கிறது. தலைவர் கலைஞரின் இருக்கை பற்றி இவ்வாறு தனிக்கடிதம் கொடுப்பது என்ற எண்ணத்தில்தான், நான் முதலில் கொடுத்த பட்டியலில் தலைவரின் பெயர் இடம் பெறவில்லையே தவிர, பன்னீர் செல்வம் அறிக்கையிலே கூறியிருப்பது போல, அதற்கு எந்தவிதமான தனிக்காரணமும் கிடையாது.
பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நான் தலைவரிடமிருந்து தட்டிப்பறித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதைவிட கேவலமான ஒரு குற்றச்சாட்டு இருக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு அளித்தவரே தலைவர் கலைஞர்தான். இன்னும் சொல்லப் போனால் கடந்த முறை சட்டமன்றக் கட்சித் தலைவராக, தலைவர் அப்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதிலும், என்னைத்தான் அறிவித்தார்கள்.
இன்னும் சொல்லப் போனால், கடந்த முறை தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோதே, ஆளுநர் உரைக்கு பதில் சொல்கின்ற வாய்ப்பை, முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் எனக்குத்தான் வழங்கினார்.பன்னீர்செல்வம், அவருடைய குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் உள்ள நெருக்கடியை மனதிலே கொண்டு, எங்கள் கழகத்திற்குள்ளேயும், குடும்பத்திற்குள்ளேயும் குழப்பம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment