Saturday 18 June 2016

கருணாநிதியுடன் உள்ள கருத்துவேறுபாட்டை திசைதிருப்பவே ஸ்டாலின் சபாநாயகர் மீது குற்றம் சாட்டுகிறார்- ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை



கட்சிக்குள் கருணாநிதிக்கும் , மு.க.ஸ்டாலினுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை திசை திருப்பவே சபாநாயகர் மீது குற்றம் சாட்டுகிறார் ஸ்டாலின் என நிதியமைச்சர் பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கை:

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப் பேரவை  வளாகத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அப்போது ஒரு சில கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்ய மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளதாகவும்  அக்கோரிக்கைகள் மீது முடிவெடுக்க சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பார்ப்பதாகவும், இல்லையெனில் பிரச்சனையை எப்படிக் கையாள வேண்டும் என்று முடிவு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.  

அதாவது  எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற  பேரவைத் தலைவர் அவர்களுக்கு இரண்டு நாள் கெடு கொடுத்துள்ளதாக ஆணவத்துடன் பேட்டியளித்துள்ளார்
 எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி வீல் சேரில் எளிதில் வந்து செல்லும் வகையில் சிறப்பு இருக்கை வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது என்றும், ஆனால், கருணாநிதிக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.  

இந்தக் கோரிக்கை ஒரு விந்தையான கோரிக்கை தான். 
கருணாநிதி 25.5.2016 அன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்திற்கு வீல் சேரில் பேரவைக்குள் வந்து உறுதிமொழி எடுத்துள்ளார்.  அப்போது, தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கை எண்.207-க்கு முன்பக்கத்தில் அவருடைய வீல்சேரில் அமர்ந்தபடியே கருணாநிதி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதை கருத்தில் கொண்டே இந்த இடம் கருணாநிதிக்கு பேரவைத் தலைவர் அவர்களால் ஒதுக்கப்பட்டுள்ளது.

  கருணாநிதி சட்டப் பேரவைக்குள் வந்து விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்றால், அவர் உறுதிமொழி எப்படி எடுத்துக் கொண்டாரோ அதே போன்று கலந்து கொள்ள இயலும்.  கருணாநிதி சட்டப் பேரவை விவாதங்களில் பங்கேற்பது பற்றி அல்ல இந்தப் பிரச்சனை.  இது உண்மையிலேயே தந்தைக்கும், தனயனுக்கும் உள்ள பிரச்சனை தான்.  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றிருக்கிறது.  திமுக என்றாலே கருணாநிதி தானே! கருணாநிதி தானே கட்சியின் தலைவர்.

  அப்படி இருக்கும் போது சட்டமன்ற கட்சியின் தலைவர் அதாவது  எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி அவருக்குத் தானே கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தங்களுக்குள்ள பிரச்சனையில், உட்கட்சி பிரச்சனையில், திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தன்னை தேர்ந்தெடுக்கச் செய்து விட்டார்.  அப்படியெனில், திமுக தலைவர் கருணாநிதியின் நிலை என்ன?  வெறும் சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்தஸ்து தானே  கருணாநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 இவ்வாறுள்ள நிலையில்,கருணாநிதி சட்டமன்றத்திற்கு வந்து விவாதங்களில் பங்கேற்க மாட்டார்  என்பதால், தன் மீது அந்தப் பழி வந்து விடக் கூடாது என்று கருதி, பிரச்சனையை திசை திருப்பும் விதமாக, கருணாநிதிக்கு சரியான இருக்கை ஒதுக்கப்படவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்டாலின் ஏற்கனவே சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதியின் பெயர் இல்லவே இல்லை.  கருணாநிதிக்கு எந்த இடம் எவ்வாறு ஒதுக்கப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவே இல்லை.  

அதாவது, கருணாநிதி சட்டமன்றத்திற்கு வருவதை ஸ்டாலின் விரும்பவே இல்லை என்பது இதிலிருந்தே தெளிவாகிறது.   
அதேபோல் உறுப்பினர்கள் பேசுவது குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளார். தினமும் 133 உறுப்பினர்களை வைத்துள்ள அதிமுக உறுப்பினர்கள் 3 பேரும் 89 உறுப்பினர்களை வைத்துள்ள திமுகவின் 2 உறுப்பினர்களும் பேசுவதாக முடிவானது. இதே போல் வை.பெருமாள் மறைவு அன்று இரங்கல் தெரிவித்து நாள் முழுதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது என்பதே உண்மை, இதற்கு முன்பெல்லாம் முதல்வர் பேசுவதற்கு ஒரு நாள் முன்பு தான் எதிர்க்கட்சித்தலைவர் பேசுவது வழக்கம்.  

இன்று,  எதிர்க்கட்சித் தலைவர், பேரவைத் தலைவர் அறைக்கு, திமுக உறுப்பினர்களுடன் சென்று தனது கோரிக்கை பற்றி எடுத்துக் கூறும் போது திமுகவைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்  பேரவைத் தலைவரை ஒருமையில் பேசி இழிவுபடுத்தியுள்ளார்.  இதைக் கண்டும் காணாமல் மு.க.ஸ்டாலின் அமைதி காத்துள்ளார்.  இந்த விவரத்தை பேரவைத் தலைவரே என்னிடம் தெரிவித்து வருத்தப்பட்டார்.  இவ்வாறு பேரவைத் தலைவரை உறுப்பினர் ஒருவர் ஒருமையில் பேசி அவமானப்படுத்தும்போது மு.க.ஸ்டாலின் அவர்கள்அன்பழகனை கண்டித்திருக்க வேண்டாமா?  அவ்வாறு செய்யாமல், வேடிக்கைப் பார்ப்பது தான் மரபுகளை கடைபிடிக்கும் முறையா? 
                                                                                         
தி .மு.க.வின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்  மு.கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித்தலைவர்மு.க.ஸ்டாலினுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள், மனமாச்சரியங்கள், சச்சரவுகள் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  இரண்டு நாட்களுக்கு முன்னர், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட கருணாநிதி புறக்கணித்து விட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. கருணாநிதியின் ஆதரவாளர்களும், ஸ்டாலினின் ஆதரவாளர்களும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

இப்படியெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளேயே உள்ள பிரச்சனைகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மீது குற்றம் சாட்டி, பொய்யான தகவல்களை தெரிவித்து, அதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கருணாநிதியிடமிருந்து தட்டிப் பறித்ததை மறைத்து விடலாம் என்று எண்ணினால் மு.க.ஸ்டாலின் ஏமாந்து தான் போவார்.  பேரவைத் தலைவருக்கு இரண்டு நாள் கெடு விதிக்கும் இது போன்ற வீராப்பு பேச்சுகளை பல முறை தமிழக மக்கள் பார்த்து சலிப்படைந்துள்ளனர். 

எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவினரும் 20.6.2016 முதல் சட்டமன்றத்திற்கு வந்து ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment