Sunday 5 June 2016

பாஜக அணியில் அதிமுகவா? தேர்தல் ஆணையம் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டுமென்பதற்காகச் செய்த காரியம்-- கருணாநிதி கருத்து


இது குறித்து திமுக தலைவர் தனது கேள்விபதில் பகுதியாக வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.க., தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டில் செய்தி வந்திருக்கிறதே?
“BJP hopes to have Jayalalithaa on board NDA soon - AIADMK may join Alliance, but not Government” என்ற தலைப்பில் 4-6-2016 அன்று வெளி வந்துள்ள செய்தியில் பா.ஜ.க. வும், அ.தி.மு.க. வும் கூட்டணி அமைக்கக் கூடும் என்று தான் எழுதியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டிற்கே சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்களும் சென்று பேசியது கூட்டணிக்கான முதற்கட்ட சமிக்ஞை போலும்! தொடர்ந்து மோடி அவர்களும், அருண்ஜெட்லி அவர்களும் ஜெயலலிதாவிடம் மிருதுவான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். கரூர் - அய்யம்பாளையம் அன்புநாதன் தொடர்பான நிகழ்விலும், திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்திலும் மத்திய அரசின் பொருளாதாரப் புலனாய்வு அமைப்புகளின் அலட்சியமும், அக்கறையின்மையும்; தேர்தல் ஆணையம் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டுமென்பதற்காகச் செய்த காரியமும்; மத்திய அரசின் உளவுத் துறை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியைப் பிளவுபடுத்துவதில் கொண்டுள்ளதாகச் சொல்லப்படும் ஆர்வமும்; பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கான அடையாளங்கள் தான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க.வின் உதவி டெல்லியிலும், அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க.வின் துணை தமிழ்நாட்டிலும் தேவைப்படுகிறது அல்லவா?

No comments:

Post a Comment