Sunday 12 June 2016

குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுகின்ற செயல் - தேர்தல் ஆணையத்துக்கு கருணாநிதி கேள்வி


தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு அனுப்பியிருக்கிறது. அந்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலைச் செம்மைப் படுத்த வேண்டும். அதன்படி, கடந்த ஐந்து வருடங்களில் இறந்தவர்கள் பட்டியலை எடுத்து, வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படி இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படா விட்டால், அவர்களது பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும். அதே போன்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே வாக்காளர் பெயர் இருப்பதையும் கண்டறிய வேண்டும். ஒரே பெயரில் உள்ள வாக்காளர் பெயர், தந்தை பெயர், வயது, முகவரி ஆகிய ஆவணங்களை வைத்து சரி பார்க்க வேண்டும். 
இப்படி ஒரே பெயரில் அனைத்து தகவல்களும் ஒரே மாதிரி இருந்தால், அந்த நபர் எந்த முகவரியில் தன்னுடைய பெயர் இருக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ, அந்த விலாசத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற எ, எஸ், டி (ஆப்சென்ட், ஷிப்ட், டெட்) லிஸ்ட் எடுத்து வீடு வீடாக வாக்குச்சாவடி அலுவலர்கள் சென்று விசாரிக்க வேண்டும். அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அந்த விலாசத்தில் யாரும் இல்லாமல் இருப்பவர்கள், வீடு மாறிச் சென்றவர்கள், இறந்தவர்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்” என்றெல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தொடருகிறது.

இந்த உத்தரவைப் படிக்கும்போது, “குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டுகின்ற செயல்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்த பின், தற்போது தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த உத்தரவு பிறப்பித்து என்ன பயன்?

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள் பற்றியும், முறைகேடுகள் பற்றியும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எத்தனை மனுக்கள் தரப் பட்டன? தமிழக வாக்காளர் பட்டியலில் மிகப் பெரிய மோசடி இருக்கிறது என்றும், இந்தியத் தேர்தல் ஆணையம் தவறுகளைக் களையவேண்டும் என்றும் 23-1-2016 நானே நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன்.
வாக்காளர் பட்டியல்படி பொதுவாக ஒரு தேர்தலுக்கும் அடுத்து வரும் தேர்தலுக்கும் இடையே 10 முதல் 12 சதவிகிதம் அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் இப்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி, கடந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலை விட இப்போது 22 சதவிகிதம் அளவுக்கும் கூடுதலாக வாக்காளர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. இந்த அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை கூடுதலாகி இருப்பதற்கு என்ன காரணம் கூறப்படுகிறதென்றால், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கூடுதலான பேர் கட்டடத் தொழில் செய்து வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக, வருகை புரிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. 
ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் கட்டிடத் தொழில் முன் எப்போதையும் விட வளர்ந்து விட்டதாகவோ, வெளி மாநிலங்களிலிருந்து கட்டிடத் தொழில் செய்து பிழைப்பதற்காக அதிகம் பேர் இங்கே வந்து விட்டதாகவோ செய்தி எதுவும் இல்லை, மாநிலத்தில் தொழிற் சாலைகளும் அதிகமாக உருவாகி, புதிய வேலை வாய்ப்புகள் பெருகிடவில்லை என்பது தான் உண்மை. இதிலிருந்து வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திலே அதிகம் பேர் குடியேறி விட்டார்கள் என்பதால் வாக்காளர் எண்ணிக்கையும் அபரிமிதமாக உயர்ந்து விட்டது என்ற தகவலும் உண்மைக்குப் பெரிதும் மாறானது.

இந்த விவரங்களை யெல்லாம் எனது அறிக்கையில் குறிப்பிட்டு, ஆளும் அதிமுக வினரின் தலையீட்டில் ஏராளமாகப் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்று தி.மு. கழகத்தின் சார்பில் தெரிவித்திருந்தேன். தேர்தல் ஆணையத்தாலேயே நாம் தந்த புகார்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தகுதியில்லாத அந்த வாக்காளர்களை நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதே போல தமிழகத்திலே உள்ள மற்ற தொகுதிகளிலும் உள்ள போலி வாக்காளர்களும் முழுமையான சரி பார்த்தலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வாக்காளர்களை நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் உடனடியாக களையப்பட வேண்டும். தேர்தல் வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் இந்தப் பிரச்சினையிலே முறையாக உரிய கவனம் செலுத்தி, போலி வாக்காளர்கள் நீக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்றும்; ஆங்காங்கே கழகத் தோழர்கள், தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.

வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான தவறுகள் இருக்கின்றன என்று எத்தனை முறை புகார் மனுக்கள் தரப்பட்டன? கடைசியாக தேர்தலுக்கு முன்பு தரப்பட்ட வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையமே சோதித்துப் பார்த்துக் கொள்ளட்டும். என்னுடைய திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள்  இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையரிடமே அதன் நகல்கள் தரப்பட்டன.  இவ்வளவு போலி வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்தார்கள். இந்தப் பட்டியலின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் கடந்த மாதத்தில் தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கையையும் அவசர அவசரமாக நடத்தி முடிவுகளை வெகுவேகமாக அறிவித்துள்ளது. மேலும் போலி வாக்காளர்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ள இந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலே தான், 2014 நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தி 37 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றதாக முடிவுகளை அறிவித்தார்கள்.

அவ்வாறு அறிவித்து விட்டு, தற்போது திடீரென்று விழித்துக் கொண்டு, வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கிறது என்றால், ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டப் பேரவைத் தேர்தலிலும் நடந்து முடிந்த இமாலயத் தவறுக்கு யார் பொறுப்பு? எத்தனை முறை கழகத்தின் சார்பில் புகார் மனுக்கள் தரப்பட்டன? அதன் கதி என்ன? இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையமே, தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் சரியாக இந்தப் பணியைச் செய்யவில்லை என்பதை இப்போது காலம் கடந்தாவது ஒப்புக் கொள்கிறதா?
 சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு, சரியான ய்மையான வாக்காளர் பட்டியல் தானே அடிப்படை! முறையான வலிமையான அஸ்திவாரம் இல்லை என்றால், அதன் மீது எழுப்பப்படும் கட்டிடம், மவுலிவாக்கம் அடுக்கு மாடிக் கட்டிடம் போல சரிந்து சாய்ந்து மண்ணுக்குள் தானே புதைந்து விடும்! பல இலட்சம் போலி வாக்காளர்கள் நிறைந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயகச் செயல் முறைகளையே கேலிக் கூத்தாக்கி விடாதா? மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது?

No comments:

Post a Comment