Saturday 18 June 2016

மதிமுகவில் அடுத்த விக்கெட் விழுகிறது - அம்மாவின் அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்திருப்பு


 
மதிமுகவின் அடுத்த விக்கட் சென்னையின் பிரபல தொழிலதிபர் ஜெயலலிதாவின் அப்பாயிண்ட்மெண்டுக்கு காத்திருக்கிறார். கிடைத்தவுடன் அதிமுகவில் இணைவார் என்ற தகவல் ஓடுகிறது.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி படுதோல்வி அடைந்ததில் அதிகம் பாதித்த கட்சிகளை வரிசைப்படுத்தினால் முதலிடத்தில் வருவது மதிமுகவாகத்தானிருக்கும், சட்டமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எடுத்த மாறுப்பட்ட நிலைபாடுகள் மக்கள் நலக்கூட்டணி கட்சிகளையே பாதித்தது.

 1996 ல் சட்டமன்ற தேர்தலில் எடுக்க ஆரம்பித்த தவறான நிலைபாடு கடைசிவரை மாறவே இல்லை. 2011 ல் அழகாக கிடைத்த வாய்ப்பை சில தொகுதிகளுக்காக தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவு எடுத்தார். இதனால் ஐந்தாண்டுகள் கட்சியினர் பிரதிநித்துவம் சட்டசபையில் இல்லாமல் போனது. அதன் பிறகு மக்கள் நலக்கூட்டணி வாய்ப்பு அருமையாக அமைந்தது. தேமுதிக , தமாகா இணைந்ததும் திமுக காங்கிரஸ் தரப்பே கொஞ்சம் ஆடித்தான் போனது.

ஆனால் தேர்தல் பிரச்சார நேரத்தில் நாளுக்கொரு முடிவு , விமர்சனம், பத்திரிக்கைகள் மேல் பாய்ந்தது என வைகோவின் நிலைபாடு பிரச்சாரத்தை பின்னுக்கு தள்ளியது. ஏற்கனவே கலகலத்து போன கட்சிக்குள் தாவ நினைத்தவர்களுக்கு திமுக விரித்த வலை சுலபமாகி போனது பலரும் கட்சித்தாவினர். சென்னையில் பலமான கட்சி நிர்வாகியாக அறியப்பட்ட வேளச்சேரி மணிமாறன் தேர்தல் முடிவுக்கு பின்னர் பகீரங்கமாக விமர்சனம் செய்து பேட்டி அளித்தார். பின்னர் அமைதி காத்த அவர் கடந்த வாரம் திமுகவில் ஐக்கியமானார்.


 தற்போது அடுத்து ஒரு முக்கிய புள்ளியும் மதிமுகவிலிருந்து வெளியேற தயாராக இருக்கிறார். சென்னையில் உள்ள முக்கிய புள்ளியான ரெட் சன் அம்பிகாபதிதான் அவர் என்று மதிமுக தரப்பில் பேச்சு பலமாக அடிபடுகிறது. பிரபலமான டாக்சி நிறுவனம் நடத்தி வரும் இவர்  வைகோவின் பரம விசுவாசி,  சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் சொற்ப வாக்குகளே பெற்றார். இந்நிலையில் வேளச்சேரி மணிமாறனை தொடர்ந்து அவர் மதிமுகவை தலைமுழுக முடிவெடுத்து விட்டதாக மதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
ஆனால் அவர் போக போவது திமுகவுக்கு அல்ல அதிமுக பக்கம் தாவ முடிவெடுத்துள்ளார். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தால் உடனே அதிமுகவில் ஐக்கியமாகி விடுவார் என ரகசிய தகவல் ஓடுகிறது. மதிமுகவின் அடுத்த விக்கட்டும் விழுகிறது. 
  

No comments:

Post a Comment