Saturday 18 June 2016

துரோகம், செயற்குழுவில் ஆவேசமான ஜெயலலிதா- கதறி அழுத உறுப்பினர்கள்


 புயல் , சூறாவளி, மழை, தென்றல் காற்றின் இதம் என செயற்குழுவில் பல  பரிணாமங்களை உறுப்பினர்கள் இன்று அனுபவித்துள்ளனர். சிலர் பயத்தால் வெலவெலத்து போயிருக்கின்றனர், சிலர் கூனி குறுகி போயுள்ளனர், சிலர் ஆவேசத்தால் அழுது புலம்பியுள்ளனர். மொத்தத்தில் ஒரு  புயலே அடித்து ஓய்ந்துள்ளது. 

கூட்டம் முடிந்து போகும் போது புதிய உற்சாகத்துடன் சென்ற செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் சில மாநில நிர்வாகிகளுக்கு தரைக்கு கீழே பூமி நழுவுவது போல் உணர்வோடு சென்றுள்ளார்களாம்.

அப்படி என்னதான் அங்கே விசாரித்தோம். சார் அம்மாவின் ஆவேசத்தை இன்று தான் பார்த்தேன் அப்பப்பா வரும்போது அமைதியாக சாந்தமாக சிரித்த முகத்துடன் வந்து அமர்ந்தாங்க. எல்லோர் வாழ்த்தையும் ஏத்துகிட்டாங்க. சரி இன்னைக்கு கூட்டம் தீர்மானத்தோடு சாதாரணமாக முடிய போகுதுன்னு தான் அம்மா மைக்கை கையில் பிடிக்கும் வரை நினைத்திருந்தோம்.ஆனால் மைக்கை பிடித்து லெப்ட் ரைட் வாங்க ஆரம்பிச்ச உடன் அரங்கமே அம்மா குரல் தவிர வேறு எதையும் கேக்காத அளவுக்கு சைலண்ட் என்றார். 

சரி என்னதான் பேசினாங்க சொல்லுங்கன்னு கேட்டபோது எங்க பேசினாங்க சாட்டையை சுழற்றினாங்க , ஆரம்பித்தவுடனே ஒரு பிடி பிடிச்சாங்க என்று  அவர் சொன்னதை  அப்படியே உங்கள் பார்வைக்கு.”” நான் கஷ்டப்பட்டு கட்சியை வழி நடத்துவேன் , நீங்கள் துரோகம் செய்வீர்கள். எதிர்கட்சிக்காரன்  கூட சேர்ந்து சொந்த வேட்பாளரையே தோற்கடிக்கிற வேலை செய்வீங்க. 200 தொகுதிகளில் வெல்ல வேண்டிய நாம் உங்களுடைய ஒவ்வொருவர்  துரோகத்தாலும் 89 தொகுதியை எதிர்க்கட்சிக்காரர்களுக்கு கொடுத்துட்டு நிற்கிறோம்.அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும் ஆனால் துரோகத்தை என்ன  செய்வது. 

மற்ற கட்சியில் பணம் வாங்கிகொண்டு தேர்தல்ல நிற்க சீட்டு கொடுப்பாங்க நான் அப்படியா செய்கிறேன் .உங்களில் யார் கட்சிக்கு உண்மையாக உழைப்பவர், விசுவாசி, தகுதியானவர் என்பதை மட்டுமே பார்த்து வாய்ப்பு கொடுத்தேன். ஏழை பணக்காரன் பார்க்கவில்லை, புதியவர் பழைய ஆள் என்றெல்லாம் பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் மறைமுகமாக கட்சி நிறுத்தும் வேட்பாளரை தோற்கடிக்கும் வேலை செய்தீர்கள் என்று பேசி நிறுத்தினாராம். ஒரு நிர்வாகிகள் முகத்தில் கூட ஈயாடவில்லையாம். 


ஒரு மந்திரி பெயரை சொல்லி இவருக்கு நான் மீண்டும் வாய்ப்பு கொடுத்தேன் ஆனால் இவர் தான் வெல்ல வேண்டும் என்று நினைத்ததை விட அடுத்த தொகுதியில் நமது கட்சி வேட்பாளர் தோற்கவேண்டும் என்பதற்காக எல்லா உள்ளடி வேலைகளும் செய்தார். அவரும் சொற்ப வாக்கு வித்யாசத்தில் தோற்றுப்போனார். அவர் ஜெயித்தால் அமைச்சராகி விடுவாராம் அதனால் இவர்  இந்த வேலையை செய்தார். இன்னொருவர் வருடம் முழுதும் எதிர்கட்சி எம்.எல்.ஏவுடன் தான் கைகோர்த்திருப்பாராம். இவருக்கு எதிராக அவரும் அவருக்கு எதிராக இவரும் ஆளைப்பார்த்து போடுவார்களாம். இப்ப நேரடியா மோதவிட்டேன் இவர் தோற்று போனார். 
இந்த துரோகத்துக்காகத்தான் நான் என் உடல் நிலையையும் பாராமல் உழைக்கிறேனா?, நான் ஏன் சிறைக்கு போக வேண்டும், என்னை முடக்கினால் கட்சியை முடக்கலாம் என்று முயற்சி எடுத்தனர். அதையும் எதிர்கொண்டு கட்சியை நடத்தி வருகிறேன், வென்றும் காட்டியுள்ளேன்,  எனக்கு  பிள்ளையா குட்டியா? ,சொத்து சுகம் சேர்க்க ஆசைப்பட்டேனா? இந்த உடல் நிலையிலும் நான் உழைத்துகொண்டிருக்கிறேன் என்று பேசிய போது ஆவேசமான தொண்டர்கள் அம்மா நாங்க இருக்கோம்மா என்று கதறி அழுதுள்ளனர். யார் அந்த துரோகிகள் அடையாளம் காட்டுங்கம்மா , அவங்கள அடித்து துரத்துங்கம்மான்னு பலர் ஆவேசமாக எழுந்து குரல்கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து பேசிய ஜெயலலிதா எனக்கு இது தேவையா? என் சுய நலத்துக்காக கட்சி நடத்துகிறேனா? கட்சி நன்றாக இருக்க வேண்டும் , தொண்டர்கள் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தானே இவ்வளவு கஷ்டமும் படுகிறேன் , சட்டமன்ற தேர்தலில் துரோகத்தால் பல இடங்களை இழந்தோம், அது யார் யார் செய்ததுன்னு எனக்கு தெரியும் . நேரம் வரும் நடவடிக்கையும் வரும்.

 வரப்போவது உள்ளாட்சி தேர்தல் 100% வெற்றி பெறணும். இல்லையென்றால் தொலைத்து விடுவேன் என்று கோபமாக கூறியுள்ளார். துரோகிகளை துரத்துங்கள் அம்மா வெற்றியை நாங்கள் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம் என்று உறுப்பினர்கள் எழுந்து கோரசாக கூறியுள்ளனர்.

பின்னர் திடீரென அமைதியான ஜெயலலிதா இத்தனைக்கும் பிறகும் நாம் வென்றுள்ளோம் அதற்கு மக்கள் நம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, ஏழை மக்களுக்கான நமது திட்டங்கள் நம் கட்சி தொண்டர்களின் அயராத உழைப்பு என்று பேசியவர் மேற்கு மண்டலங்களை சேர்ந்த சில மணியான அமைச்சர்களின் பெயரை சொல்லி கட்சிக்காக சிறப்பாக உழைத்தார்கள் என்று பாராட்டியுள்ளார். இவ்வளவும் சொல்கிற நான் திரும்ப துரோகம் செய்த சிலருக்கு ஏன் பதவி கொடுத்தீங்கன்னு கேட்பீர்கள் எல்லாம் காரணமாகத்தான் என்று பூடகமான சிரிப்போடு கூட்டத்தை முடித்தாராம்.

மொத்தத்தில் இந்த கூட்டத்தில் சரியான பூஸ்ட் கொடுத்து அனுப்பியுள்ளார் ஜெயலலிதா. உள்ளாட்சியில் ரிசல்ட் காட்டாவிட்டால் நமது பதவி அதோ கதி என்று அனைவருக்கும் புரிந்திருக்கும் ஆகவே வேகம் சற்று கூடுதலாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment