Tuesday 21 June 2016

பரிட்சையில் தேறுவாரா ஸ்டாலின்



1968 முதல் அரசியலில் இருந்தாலும் சட்டமன்றத்திற்குள் ஸ்டாலின் அடி எடுத்து வைத்தது என்னவோ 1989 ல் தான். அதன் பின்னர் 2006 ல் துணை முதல்வர் என்ற நிலைக்கு உயர்ந்து , முதல்வர் பதிலளிக்கும் நிகழ்வில் ஸ்டாலின் பதிலளித்து பேசிய சம்பவங்கள் உண்டு. 27 ஆண்டுகள் சட்டமன்றத்தில் அனுபவம் போன்றவை ஸ்டாலினுக்கு இருந்தாலும் சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவராக அவரது பணி நடைபெற்றதில்லை.

கடந்த 2011 சட்ட மன்ற தேர்தலில் 29 இடங்களை பெற்ற தேமுதிக தலைவர் எதிர்கட்சித்தலைவராக இருந்தார்.இந்த முறை 89 எம்.எல்.ஏக்களுடன் திமுக எதிர்கட்சியாக உள்ள நிலையில் அதன்  தலைவராக எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்தில் ஸ்டாலின்  அமர்ந்துள்ளார்.  சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கி நான்காவது நாளான இன்று எதிர்கட்சித்தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் பேச வேண்டும். 

கடந்த சில நாட்களாக நடந்து வரும் சட்டசபை நிகழ்வுகளில் நீயா நானா மோதல்கள் நடக்கிறதே தவிர சில விஷயங்கள் மட்டுமே மக்கள் பிரச்சனை பேசப்பட்டது என்ற பிரச்சனை எழுந்துள்ளது.பெயர் விவகாரம், யார் ஆட்சியில் தவறு செய்தது, இலங்கை பிரச்சனை, மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது யார், தேர்தல் பிரச்சார பயணத்தை கிண்டல் செய்வது என்ற லாவணி பாடும் விவகாரங்களில் சட்டசபையின் பொன்னான நேரங்கள் வீணடிக்கப்பட்டது. 

எதிர்கட்சித்தலைவரான ஸ்டாலினும் திமுகவினரும் முதல்வர் ஜெயலலிதாவின் கச்சத்தீவு குறித்த    அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டது. சட்டமன்றம் வேறு பொதுக்கூட்ட மேடைகளில் பேசுவது வேறு எனபது ஸ்டாலினுக்கு தெரியாதது அல்ல. ஆனால் சட்டமன்றத்தில் வாதம் செய்ய ஹோம்வர்க் அதிகம் தேவை.

 கடந்த பத்தாண்டுகளில் ஜெயலலிதா அதில் தேர்ச்சி பெற்றவராக திகழ்கிறார். இது தவிர அரசு எந்திர அதிகாரிகள் அளிக்கும் கூடுதல் தகவல் வசதி.
 என்னதான் நமக்கு வசதிகள் இருந்தாலும் சமயோசிதமாக செயல்பட்டு வாதங்களை எடுத்து வைக்கும் திறமை வேண்டும். அதற்கு முதலில் மக்கள் பிரச்சனைகளில் சமரசமின்றி இருக்க வேண்டும், ஏராளமான தகவலகளை அறிந்து சபைக்கு வர வேண்டும்.

 இதில் திமுக தலைவர் கருணாநிதியின் திறமை அளப்பறியது.  தகுந்த நேரத்தில் சரியான மேற்கோள்களுடன் சரியாக வாதத்தை மாற்றாரும் ஏற்றுகொள்ளும் வகையில் எடுத்து வைப்பார். திமுக தலைவருக்கு பிறகு அந்த பொறுப்பை ஏற்றிருக்கும் ஸ்டாலினுக்கு வசதியாக ஏகப்பட்ட பிரச்சனைகள் அரசாங்கத்துக்கு எதிராக பேச உள்ளது. 

அதை சரியான வாதம்  மூலம் எடுத்துரைத்து மக்களுக்கான பிரச்சார மேடையாக ஸ்டாலின் மாற்றுவாரா அல்லது வழக்கமான முறையில் லாவணி பாடும் விதத்தில் அவரது வாஅதம் அமையுமா என்பதே  எல்லோரின் எதிர்பார்ப்பும்.
அதை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்...

No comments:

Post a Comment