Wednesday 15 June 2016

போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் பலே ஆசாமிகள் கைது - தயாரிப்பு மெஷின்கள், போலி முத்திரைகள் பறிமுதல்




போலி பாஸ்போர்ட்டுகள் விசா முதலியவற்றை தயாரித்து பொதுமக்களை மோசடி செய்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னையில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து ஒரு கும்பல் இலங்கை தமிழர்களுக்கு வினியோகிப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

தேடுதல் வேட்டையில் கடந்த 31-ந்தேதி திருமுல்லைவாயலில் பதுங்கி இருந்த நாகூர் மீரான், குணநாயகம் என்ற  2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 9 போலி பாஸ்போர்ட்டுகளை தனிப்படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்த கும்பலின் தலைவன் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதில் கில்லாடியான இலங்கையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (61) என்பது தெரிய வந்தது. 


போலி பாஸ்போர்ட் தயாரிப்பதில் கில்லாடியான கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே கடந்த 2003–ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டவர். 2005–ல் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. 2014–ம் ஆண்டு 100–க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகளுடன் அவர் பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.  மதுரவாயல் கிருஷ்ணா நகரில் தங்கி இருந்த அவர் போலீஸ் தேடுவதை அறிந்து தலை மறைவானார். 

இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று தஞ்சை முத்துபேட்டையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகளான ராஜன், முரளிதரன் ஆகியோரும் பிடிபட்டனர். இவர்கள் காலாவதியான பாஸ்போர்ட்டுகளை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி,  பின்னர் அதில் உள்ள போட்டோவை எடுத்து விட்டு போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்துள்ளனர். 

இதற்காக போலி முத்திரைகளையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். போலியாக விசா எடுத்தும் கொடுத்துள்ளனர். போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுப்பதற்கு ரூ.30 ஆயிரமும், விசா வாங்கி கொடுப்பதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையிலும் பொது மக்களிடம் இருந்து வசூல் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மதுரவாயலில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். 

அப்போது 28 போலி பாஸ்போர்ட்டுகள், 40–க்கும் மேற்பட்ட போலி குடியுரிமை முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர், லேமினேசன் மிஷின்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவைகளையும் போலீசார் கைபற்றினர். இந்த வழக்கில் திறமையாக துப்பு  தனிப்படையினரை கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் பாராட்டினார். 

No comments:

Post a Comment