Monday 6 June 2016

இன்று துவங்குகிறது ரமலான் நோன்பு


இஸ்லாமியர்கள் சிறப்பாக கொண்டாஅடும் மாதங்களில் முக்கியமானது ரமலான் மாதமாகௌ. இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் வசனங்கள் இறைவனால் இறக்கப்பட்ட மாதமாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இஸ்லாமியர்களின் வாழ்வில் ஐந்து கடமைகள் முக்கியமானது அது,  கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் (தானம் செய்தல்), ஹஜ்செய்தல்   அகியவை ஆகும். . இவற்றில் தொழுகைதான் மிகவும் முக்கிய கடமையாக திகழ்கிறது இதற்கு அடுத்த இடத்தை நோன்பு எனப்படும் விரதம் இருத்தலை குறிப்பிடுகின்றனர்.

முஸ்லிம்களின் மாதங்களான 12 மாதங்களில் ரமலான் மாதத்திற்குதான் சிறப்பு தன்மைகள் பல உள்ளதாக முஸ்லிம் சான்றோர்கள் பலர் தெரிவித்துள்ளனர். ஈதுல் பித்ர் என அழைக்கப்படும் ஈகைத் திருநாள், ரமலான் மாதத்தின் இறுதியில் கொண்டாடப்படுகிறது இந்த நாட்களில் தான் அதாவது ரமலான் 27 ஆம் நாள் இறை வசனங்கள் இறக்கபட்ட நாளாக கருதுகின்றனர். ரமலான் வந்துவிட்டால், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல் என்பதும், இல்லாதோருக்கு இருப்போர் உதவி செய்தல் என்பதும் அதிகரித்துவிடும். நோன்பு இருப்பவர்கள் முதல் பிறை கண்ட பின்னர் தான் தங்களது நோன்பை (விரதமிருத்தலை) தொடங்குகின்றனர். நோன்பு இருக்கும் 30 நாட்களும் சூரியன் உதிப்பதற்கு முன்பாக எழுந்து உணவு உண்ண வேண்டும். இந்த நேரத்தை சஹர் உடைய நேரம் என்று அழைக்கின்றனர்.

சூரியன் உதிக்கும் முன்பாக உணவு எடுத்த பின்னர், சூரியன் மறையும் வரை தண்ணீர் கூட பருகக் கூடாது. சூரியன் மறைந்த பின்னரே நோன்பு திறக்க வேண்டும்.சுபுஹீ எனப்படும் அதிகாலை தொழுகைக்கு முன்பு நோன்பு பிடிக்கும் முஸ்லிம்கள், மஹ்ரிப் எனப்படும் மாலை நேர தொழுகைக்கு முன்பாக நோன்பு திறப்பது வழக்கம். சூரியன் அஸ்தமனம் மற்றும் உதய நேரங்களை கணக்கில் கொண்டு இந்த 2 நிகழ்ச்சிகளும் செயல்படுத்தப்படுகின்றது.நோன்பு திறத்தலை இப்தார் என்று அழைக்கின்றனர். நோன்பு திறக்கும்போது சரியான நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமன நேரத்தை கணக்கில் கொண்டு நோன்பு திறக்க வேண்டும். தாமதம் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் 6 முறை தொழுகிறார்கள்.  தராவிஹ் எனப்படும் தொழுகை கூடுதலாக இரவு 9 மணிக்கு மேல் நடத்தப்படுகிறது.

ஊர்விட்டு ஊர் செல்லும் பயணிகள், நோயாளிகளை தவிர அனைவருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. 7 வயது குழந்தைகளுக்கும் நோன்பு பிடிப்பதற்கு அனுமதி உண்டு. சிறுவர் - சிறுமிகள் நோன்பின்போது சோர்வடைந்தால், அந்த நேரத்தில் அவர்கள் நோன்பை திறந்து கொள்ளலாம். இதற்கு அவர்களது பெற்றோர்களின் கவனம் அதிகம் தேவை. மாதவிடாய் காலங்களைத் தவிர மற்ற நாட்களில் பெண்கள் நோன்பு இருப்பது கடமையாகும். நோன்பு இருக்கும் நேரத்தில் ஐங்கால தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

நோன்பு இருப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டும். புறம் பேசுதல், பொய் சொல்லுதல், பிறருக்கு துன்பம் விளைவித்தல், பிறர் மணம் புண்படுமாறு பேசுதல் கூடாது.நோன்பு இருக்கும் நேரத்தில் தவறான வார்த்தைகளையோ, தவறான செயல்களையோ பயன்படுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.

இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டாயம் இல்லாதவர்களுக்கு தானம் (ஜகாத்) அளிக்க வேண்டும் என்பதும் ஒரு கடமையாக்கப்பட்டுள்ளது. 30 நோன்புகளின் இறுதியில் ரமலான் பண்டிகை சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இந்த மாதம் முழுதும் மாலையில் தொடங்கி விடியும் வரை பரபரப்பாக இருக்கும். பகல் நேரங்களில் வேலை இருக்காது. நகரமே வெறிச்சோடி விடும்.

No comments:

Post a Comment