Tuesday 21 June 2016

வங்கி மேலாளரின் மனைவி கழுத்தறுத்து கொலை - ஆணவக்கொலை என உறவினர்கள் புகார்




நாமக்கல்லில் காதல் திருமணம் செய்த  வங்கி மேலாளரின் மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஆணவக்கொலை என உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நாமக்கல் நகரிலுள்ள தில்லைபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்(42). இவர் ஒசூரில் தனியார் வங்கியின் கிளையொன்றில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுமதி (வயது-35). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை.

நாமக்கல் கிளையில் பணியாற்றிய சந்தோஷ், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒசூருக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு வீடு கிடைக்கும் வரை மனைவியை நாமக்கல்லிலேயே விட்டு விட்டு தான் மட்டும் ஓசூரில் பணிக்கு சென்றார். ஆனாலும் செல்போன் மூலம் தினம் நான்கைந்து முறை தொடர்பு கொள்வார்.  

  இந்த நிலையில், சந்தோஷ், திங்கள்கிழமை மதியம், மனைவியிடம் செல்போனில் பே கூப்பிட்டு பேசியுள்ளார். மீண்டும் மாலை ஆறு மணிக்கு அழைத்துள்ளார், ஆனால் பலமுறை அழைத்தும் போன் எடுக்கப்படாமல் ரிங் போயுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த சந்தோஷ் நாமக்கல் வங்கி கிளையில் பணியாற்றும் நண்பர்களை கூப்பிட்டு தனது வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.அவரது நண்பர்கள் சென்று பார்த்தபோது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்துள்ளது. வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கை அறையில் கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. கை ரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.

  சந்தோஷ் நாமக்கல் மாவட்டம், மனைவி சுமதி வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். காதலித்து திருமணம் செய்துள்ளனர். திருமணம் நடந்து 8 ஆண்டுகள் ஆகின்றன.  குழந்தைகள் இல்லை. இந்த திருமணத்தில் சந்தோஷின் பெற்றோருக்கு சம்மதம் இல்லை. இதனால், கடந்த 8 ஆண்டுகளாக  மகனுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர். 

அண்மையில் மகனை ஏற்றுக்கொண்ட சந்தோஷின் பெற்றோர், திருமண வரவேற்பு நடத்துவது என முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக, திங்கள்கிழமை பிற்பகல் சந்தோஷின் தாய், சுமதியைப் பார்க்க வந்ததாகத் கூறப்படுகிறது. அவர் வீட்டிலிருந்து சென்ற பிறகு தான், சந்தோஷ் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். கதவை வெளிப்புறமாக தாழிட்டு சென்றது யார் என்பது பற்றியும் தெரியவில்லை.

திருமணத்தை இத்தனை ஆண்டுகள் ஏற்காதவர்கள் இப்பொது ஏற்றுகொள்வது போல் வந்துள்ளனர். சுமதி ஜாதிய பிரச்சனை காரணமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதாக சுமதியின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் கணவன் சந்தோஷும் அவரது உறவினர்களும் முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 இதுகுறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துதொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment