Tuesday 21 June 2016

சட்டப்பேரவையா சண்டைக்கூடமா? ராமதாஸ் கேள்வி



தமிழக சட்டப்பேரவையில் விவாதங்கள் என்ற பெயரில் நடைபெறும் மோதல்களும், தனிநபர் தாக்குதல்களும் மிகுந்த கவலையளிக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இதற்காகத் தான் இரண்டு கட்சியினரையும் சட்டப்பேரவைக்கு மக்கள் அனுப்பி வைத்தார்களா? என்ற வினா எழுகிறது.

 முதல் நாள் விவாதத்தில் அனல் பறந்திருந்தால் அது மகிழ்ச்சியளிப்பதாக இருந்திருக்கும். ஆனால், முதல் நாள் விவாதத்தில் அவலங்கள் நிறைந்திருந்தது தான் கவலையளிக்கிறது.
ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, திமுக தலைவர் கலைஞர் மீது அடுக்கடுக்காக புகார்களைக் கூறியதுடன், கலைஞரை கருணாநிதி என்று அழைத்ததால் திமுகவினர் ஆத்திரமடைந்து அமளியில் ஈடுபட்டனர். மற்றொரு தருணத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? என்பது பற்றி  இரு கட்சி தலைவர்களும் நடத்திய வார்த்தை வீச்சுகள் அவைக்கு மரியாதை சேர்ப்பதாக இல்லை.

திமுக தலைவர் கலைஞர் 5 முறை முதலமைச்சராக இருந்தவர். 13&ஆவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். அந்த அடிப்படையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, அவரை கலைஞர் என்றோ, திமுக தலைவர் என்றோ, முன்னாள் முதலமைச்சர் என்றோ கூறியிருந்திருக்கலாம். ஆனால், செம்மலை அவ்வாறு கூறவில்லை. அது மரபுப்படி தவறு என்றாலும், விதிப்படி தவறு இல்லை.

சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு வழிகாட்டுபவை விதிகளும், மரபுகளும். விதிகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், மரபுகளை கடைபிடிக்க வேண்டும் என்பதற்கு எந்தக் கட்டாயமும் இல்லை. இன்னும் கேட்டால் கடந்த 25 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது திமுக தலைவரை கருணாநிதி என்றும், திமுக ஆட்சியிலிருக்கும் போது அதிமுக பொதுச் செயலாளரை ஜெயலலிதா என்றும் அழைப்பது தான் பெரும்பாலான நேரங்களில் வழக்கமாக இருந்திருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக ஒரு கட்சியின் தலைவரை பெயர் கூறி அழைத்தார்கள் என்பது அமளி கிளப்ப வேண்டிய விஷயமா? என்ற வினாவும் எழுகிறது.

அதேபோல், கச்சத்தீவு குறித்த வாத, எதிர்வாதங்களும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கச்சத்தீவு  கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான் தாரை வார்க்கப்பட்டது என்பதும், கச்சத்தீவை மீட்கும் வரை ஓய மாட்டேன் என்று 15.08.1991 அன்று சென்னை கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய ஜெயலலிதா அதற்காக இதுவரை துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை என்பதும் ஊரறிந்த உண்மை. இரு தரப்பின் மீதும் தவறு உள்ள நிலையில், அவை மறைத்துவிட்டு எதிர்தரப்பினர் மீது மட்டும் புகார்களைக் கூறி அவை நடவடிக்கைகளை முடக்குவது ஆரோக்கியமான செயலாக இருக்க முடியாது.

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணி தவிர மற்ற கட்சிகளுக்கு சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. எனவே, அதிமுகவும், திமுகவும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளாக இருந்து மிகப்பொறுப்புடன் செயல்பட வேண்டிய கடமை உள்ளது.

புதிய அரசு பொறுப்பேற்றவுடன் நடந்த சில அரசியல் நாகரீகம் நிறைந்த சில நிகழ்வுகள் தமிழக அரசியலில் நாகரீகம் துளிர் விடுகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், அதிமுகவும், திமுகவும் இருக்கும் வரை தமிழக அரசியலில் நாகரீகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற யதார்த்தத்தை சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் நிரூபித்து விட்டன.

 1989&ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் தொடங்கிய அரசியல் அநாகரீகம் இன்றளவும் தொடர்கிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பு செய்தால் ஓரளவாவது அவை நாகரீகம் இருக்கும். ஆனால், அதை செய்வதற்கு கூட தமிழகத்தை ஆளும்கட்சி முன்வராதது துரதிருஷ்டவசமானதாகும்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்க்கட்சி அமைந்திருப்பதால் சட்டப்பேரவையில் ஜனநாயகம் தழைக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால்,  கலைஞருக்கு முன்வரிசையில் இடம், கலைஞரின் பெயரை யாரும் குறிப்பிடக்கூடாது உள்ளிட்டவற்றை தவிர வேறு பிரச்சினைகளே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை தான் சட்டப்பேரவை நிகழ்வுகள் காட்டுகின்றன.

கலைஞரை கருணாநிதி என்று அழைப்பதற்காக அதிமுகவை மக்கள் ஆளுங்கட்சியாக்கவில்லை. அதேபோல், கலைஞரின் பெயர் உரிமைக்கு போராடுவதற்காக திமுகவை எதிர்க்கட்சியாக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காகத் தான் இரு கட்சிகளுக்கு இந்த பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ளனர்.

200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் விலைபோகாத படித்த வாக்காளர்கள் சட்டமன்ற நிகழ்வுகளை கவனிக்காமல் இருக்க மாட்டார்கள். எனவே, அவை நாகரீகத்தை காத்து, மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து இரு கட்சிகளும் அவையில் விவாதிக்க முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment