Thursday 16 June 2016

லோக் ஆயுக்தா சட்டம் தமிழக அரசின் அறிவிப்பிற்கு - டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு



      புதியதாக பொறுப்பேற்றுள்ள 15-வது  தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் அடுத்த ஓராண்டிற்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆளுநர் திரு. ரோசய்யா அவர்கள் இன்று உரையாற்றியுள்ளார்., 

      இவ்வுரையில், தமிழக அரசிற்கு அதிகளவில் வருவாய் தரக்கூடிய தாது மணல் விற்பனையை அரசே நேரடியாக ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காரணம் தமிழக முதல்வர் தனது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அவ்வாறு நடந்தால் மதுவிலக்கின் மூலம்  ஏற்படும் வருவாய் இழப்பை, இந்த  தாது மணல் விற்பனை வருவாயைக் கொண்டு எளிதாக ஈடு செய்துவிட முடியும்.

      மேலும் இந்திய ஜனநாயகக் கட்சி தனது தேர்தல் அறிக்கையிலும் – பிரச்சாரத்திலும் தொடர்ந்து வலியுறுத்தியதைப் போல், தற்போது ஆளுநர் உரையின் வாயிலாக “லோக்ஆயுக்தா“ சட்டம்  கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதுடன்,  ஊழலையும் – லஞ்சத்தையும் ஒழிப்பதற்கான நல்ல துவக்கமாக இதனை கருதுகிறோம்.

      இதேபோல்,  தமிழகத்திற்கு பொது மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து விலக்களிக்க வலியுறுத்தப்படும் என்ற அறிவிப்பு கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் மருத்துவம் போன்ற உயர்கல்வி கற்க எளிதாக வழிவகுக்கும்.

      அனைத்து ரேஷன் கடைகளையும் கணிணி மயமாக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க  வழிவகுப்பதுடன், ரேஷன் பொருட்களின் இருப்பையும் இதன் மூலம் எளிதில் கண்காணிக்க  முடியும்.

      மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பேணிக்காத்திட புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் எனவும், இலங்கை கடற்படையால் அதிக இன்னல்களுக்கும் – தாக்குதலுக்கும் உள்ளாகும் தமிழக மீனவர்களை காத்திட உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் எனவும், அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்துவரும் தமிழகத்தில் பல்வேறு போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க புதிய சாலைகள் – மேம்பாலங்கள் – விரைவு சாலைகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ள திட்டங்கள் மக்களுக்கு அதிகளவில் பயன்தரும்.

      அதுபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் கொண்டுவரப்பட்ட முதலீட்டின் அடிப்படையில் தமிழக இளைஞர்களுக்கு ஏறக்குறைய 4 லட்சத்து 20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கல்வித் தகுதிக்கு ஏற்ப நேரடியாக எவ்வளவு வேலைவாய்ப்பு…?  மறைமுகமாக எவ்வளவு வேலைவாய்ப்பு..? உருவாக்கப்படும் என்பதை தமிழக அரசு விரிவாக தெளிவுபடுத்த வேண்டும்.

      அதேபோல் பல்லாயிரக்கணக்கான  கிராம – நகர்ப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் “நோக்கியா“ செல்போன் தொழிற்சாலை மீண்டும் செயல்பட  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

      மொத்தத்தில் தமிழக அரசின் அடுத்த ஓராண்டிற்கான செயல்திட்டத்தில் ஆளுநர் குறப்பிட்ட அனைத்தும் வெறும் அறிவிப்புகளாக மட்டும் இல்லாமல் – அதனை 100 சதவீதம் விரைந்து செயல்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தால் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாகவும் – முன் மாதிரி மாநிலமாகவும் திகழும்.  எனவே இவற்றை தொய்வில்லாமல் செயல்படுத்திட வேண்டும் என தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.

No comments:

Post a Comment