Thursday 16 June 2016

ரூ.300 லஞ்சம் தரமுடியாமல் உயிரிழந்த வாலிபர் -- மதுரை அரசு மருத்துவமனை 2 பேர் சஸ்பெண்ட் வார்டுபாய் கைது


மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளைஞர் ஒருவர்  சிகிச்சைக்கு ரூ.300 லஞ்சம் தர முடியாதததால் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் லஞ்சம் கேட்ட வார்டு பாயை கைது செய்தனர். 



மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. தட்டச்சு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். மகன் ராஜேந்திர பிரசாத்துக்கு, (18) கடந்த 2-ம் தேதி காலை 10.30 மணியளவில் வலிப்பு ஏற்பட்டதால், 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.


மருத்துவமனையில் இறங்கியதும் உடனடியாக அவசர சிகிச்சை வெளிநோயாளிகள் வார்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அப்போது, அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காமல், மருத்துவர் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்நோயாளிகள் பிரிவுக்குக் கொண்டு செல்லும்படி கணபதியிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், கணபதி 20 நிமிடம் வரிசையில் நின்று உள் நோயாளிகள் அனுமதிச் சீட்டை வாங்கியுள்ளார். அப்போது அவரை ஸ்டிரெக்சரில் கொண்டு வைத்து தள்ளி செல்ல  மருத்துவமனை பணியாளர் ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார்.

பணத்தை கணபதியால்  தர முடியவில்லை. இதனால் ஸ்டரச்சரை விட்டு விட்டு அந்த ஊழியர் சென்றுவிட்டார். பின்னர் கணபதியே தனது மகனை ஸ்ட்ரச்சரில் வைத்து மருத்துவமனை உள்ளே கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் ராஜேந்திர பிரசாத் இறந்து போனதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து கணபதி முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக நேரம் கடத்திய செவிலியர் உதவியாளர்களான பூப்பாண்டி, ரேவதி ஆகியோரை இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் மருத்துவமனை நிலைய அலுவலர் தர்மராஜ் அளித்த புகாரின் பேரில் , மதிச்சியம் போலீசார் விசாரணை நடத்தினர். 

இச்சம்பவத்தில் இடைத்தரகராக இருந்து பணம் கேட்டு தாமதம் செய்த மருத்துவமனை முன்னாள் ஒப்பந்த பணியாளர் பால்பாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மருத்துவமனை ஊழியர்கள் , நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இது போன்ற இடைத்தரகர்கள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.  இந்த சம்பவம் தவிர வேறு எதாவது சம்பவம் இது போன்று நடந்துள்ளதா வேறு எவருக்கேனும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment