Sunday 19 June 2016

நமக்கு நாமே போலீசார் உருவாக்கும் ரூ.1 கோடி நலநிதி - வாட்ஸ் அப்பில் பரவும் ஆதரவு



ஓசூர் அருகில் ஆசிரியை நகையை பறித்துசென்ற கொள்ளையர்களை  பிடிக்கும் முயற்சியில்  கொள்ளையர்களின் கத்திக்குத்துக்கு ஆளாகி உயிரிழந்த தலைமை காவலர் முனுசாமி மரணம் காவலர்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சையை எழுப்பியுள்ளது. மேலுக்கு எந்த உணர்ச்சிகளையும் காட்டாத காவலர்கள் வாட்ஸ் அப்பில் தங்கள் உணர்ச்சிகளை கொட்டி தீர்க்கின்றனர்.  அதில் ஒன்றுதான் காவலர்களின் நமக்கு நாமே கோடி ரூபாய் நலநிதி திட்டம். 


அதற்கு முன்னர் வாட்ஸ் அப்பில் ஓடும் தகவல் 


 சவுதி அரேபியாவில் வேலைக்குச் சென்ற பெண் வீட்டின் உரிமையாளரின் கொடுமை தாங்காமல் மாடியில் இருந்து குதித்த போது முதுகு தண்டுவடத்தில் காயம் அதற்கு தமிழக முதல்வர் 10 இலட்சம் நிதி உதவி.... பணியின் போது  மக்களுக்காக போராடி சமூக விரோதிகளால் கத்தியால் குத்துப்பட்டு இறந்த நமது சகோதரருக்கு 5 இலட்சம் நிதிஉதவி... எனவே சகோதரர்களே பணி செய்தால் மட்டும் போதும் நமது உயிரை பணயம் வைத்து பணி செய்து நமது குடும்பத்தை தெருவில் நிறுத்தி விடாதீர்கள்.

 காவலர்களின் அவலம்.  நடிகர்கள் , சினிமா துறையினருக்கு நிவாரணம் 10 லட்சம், மக்கள் பணி செய்து உயிர் தியாகம் செய்த காவலரின் குடும்பத்திற்கு 5 லட்சம். யானை இருக்கும் இடத்தில வீடு கட்டி யானை மிதித்து செத்தால் 3 லட்சம் , தன் வீட்டுக்கு போக முடியாமல் காக்கியை உடுத்தி நேரம் காலம் தெரியாமல் பணி புரிந்து இறந்தவர் குடும்பத்திற்கு 5 லட்சம். 

உத்தரபிரதேசத்தில் காவலர்கள் கலவரத்தில் உயிர் இழந்ததற்கு அவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கி அந்த மாநில முதல்வர் அவர்கள் தியாகத்தை கௌரவித்தார். அது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் உள்ளவருக்கு உடனடி வேலை , டெல்லியில்  பணியின் போது குற்றவாளிகளால் தாக்கப்பட்டு இறந்த காவலர் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு ஒரு கோடி நிவாரணம் வழங்கியது , இங்கே காக்கிகளுக்கு என்ன மதிப்பு. 


பொதுமக்களுக்காக போராடி உயிர் நீத்த காவலர் முனுசாமி குடும்பத்திற்கும் ஒரு கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ற கோரிக்கையும் வாட்ஸ் அப்பில் ஓடுகிறது.

இறந்த காவலர் முனுசாமி தனது மகளை மருத்துவம் படிக்க வைக்க ஆசைப்பாட்டார் , அதற்கு ஏற்றார் போல் அவரது மகள் பனிரெண்டாம் வகுப்பு  தேர்வில் 1182 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும் முனுசாமியின் கனவை நிறைவேற்றும் விதமாக அவரது மகள் படிப்புக்கு சிறப்பு அனுமதி மூலம் தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் காவலர்கள் மெசேஜ் வாட்ஸ் அப்புகளில் வைராலாக பரவுகிறது.  

 இதை விட ஹைலைட்டாக நமக்கு நாமே கோடி ரூபாய் நல உதவி திட்டம் பற்றிய மெசேஜ் தான் இப்ப காவலர்கள் மத்தியில் ஹைலைட். அந்த மெசேஜ் விபரம் இதோ.

காவல் துறை சகோதரர்களே, நமக்கு பிறகும் நமது குடும்பம் காக்கப்பட வேண்டும் என்று பலரும் நினைக்கலாம்.
தமிழ்நாடு காவல்துறையில் சுமார் 100000 காவலர்கள் பணி புரிவதாக வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்தில் இயற்கையாகவோ எதிர்பாராத விதமாகவோ ஒரு காவலர் இறந்து விட்டால் ஒவ்வொரு காவலரும் ரூ. 100 செலுத்த வேண்டும். 
எதிர்பாராத விதமாக இரண்டு அல்லது மூன்று காவலர்கள் இறந்து விட்டால் ஒவ்வொருவருக்கும் தலா 100 செலுத்த வேண்டும். அவ்வாறு நாம் கொடுக்கும் சிறிய தொகை 100000  ×ரூ.100 = ரூ.1,00,00,000 (ரூ.1 கோடி) அந்த குடும்பத்திற்கு உதவி தொகையாக கிடைக்கும். நாம் அரசாங்கத்தையோ மற்ற யாராவது உதவி செய்வார்களா என்று எதிர் பார்க்க தேவை இல்லை. 

  இறந்த காவலரின் குடும்பத்துக்கு 1 கோடி என்பது அடுத்த தலைமுறைக்கும் வரும். இதில் தங்கள் குடும்பத்தின் மேல் அக்கறை கொண்ட விருப்பமுள்ள காவலர்கள் மட்டும் உறுப்பினர்களாக சேர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். யாரையும் கட்டாய படுத்தி இதில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு காவல்துறை முழுவதுக்கும் சேர்த்து ஒரு வங்கி கணக்கு ஆரம்பித்து  அதில் உறுப்பினர்கள் பணம் செலுத்துதல் வேண்டும்.

 இந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இதற்கென ஒரு தலைமை காவலர் போதும். நமது சியுஜி போனில் பிரதி மாதம் இறந்த காவல்துறை ஆளினர்களின் பெயர் மாவட்டம் மற்றும் விபரங்கள் வருமாறு ஒரு சிஸ்டம் உருவாக்க வேண்டும். இதில் உறுப்பினர்களாக உள்ள காவலருக்கு மட்டுமே இந்த முறை மூலம் பயன்  பெற முடியும்.

 100 ரூபாய் கூட கொடுக்க முடியாத நல்ல உள்ளம் கொண்ட காவலர்களுக்கு எக்காரணம் கொண்டும் இந்த தொகை சேராது.  இது வெறும் ஆரம்பம் தான் நாம் கலந்து பேசி இன்னும் இந்த முறையை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் இறந்தாலும் நம் குடும்பம் நல்லா இருக்கும் என நம்பிக்கை கொண்டு பணி புரியலாம். 

இது நிச்சயமாக காவல்துறை சங்கம் அல்ல. அன்பு அண்ணன்களே தம்பிகளே தங்களது கருத்து வேறுபாடுகளை கட்டாயம் பகிர்ந்து கொண்டு ஒரு சிறந்த முறையில் நமது குடும்பத்தை காப்போம். " காவலர்களின் நமக்கு நாமே " 

இவ்வாறு இந்த தகவல் காவல்துறை வட்டாரத்தில் ஓடுகிறது. இதற்கு ஆதரவும் பல மாவட்டங்களில் பெருகி வருகிறது. கோவையில் 300 க்கும் மேற்ப்பட்ட போலீசார் ஒன்றிணைந்துள்ளனர். சென்னை உட்பட பல மாவட்டங்களில் இந்த முயற்சிகள் வலுப்பெற்று வருகிறது.

No comments:

Post a Comment