Sunday 19 June 2016

மதிமுக இப்தார் நிகழ்ச்சி புறக்கணிப்பு - குட்பை சொல்லும் விஜயகாந்த்




மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. தேர்தலில் பலமான பிரச்சாரத்தை அனைத்து கட்சிகளும் முன்னெடுத்து சென்றாலும் மக்கள் நலக்கூட்டணி தேமுதிகவை மக்கள் முற்றிலும் புறக்கணித்ததால் கிங் விஜயகாந்தே தோல்வியை தழுவினார்.



 கூட்டணி அமைக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த சந்திரகுமார் உள்ளிட்ட   மூன்று முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறியது தேமுதிகவிற்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணியது.

 தேர்தல் தோல்வியை அடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியை தழுவினால் கட்டாயம் கட்சியை காப்பாற்ற முடியாது என விஜயகாந்த் நினைக்கிறார். கடந்த முறை கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் திமுக கூட்டணிக்கு செல்லலாம் என்று கூறியபோதும் மாற்றாக முடிவெடுத்தது பற்றி விஜயகாந்த் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.


அதன் விளைவு மீண்டும் ஒன்றிய மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்தி கருத்துக்களை கேட்க ஆரம்பித்துள்ளார். அதில் அனைவரும் சொன்ன கருத்து, தனியாக நிற்க வேண்டும் என்பதே. 20 சதவிகித அளவிலான கட்சியினர் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.


இவைகளை காது கொடுத்து கேட்டுள்ள விஜயகாந்த் மாறுபட்ட முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது. தனித்து நின்று பலத்தை காட்டுவதா அல்லது பாஜக அணியில் இணைவதா என்று விரைவில்  முடிவெடுக்க உள்ளார், ஆனால் ஒன்று மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை தேமுதிக சந்திக்காது என்பது மட்டும் உறுதி என்று ஆலோசனைக்கு வந்த நிர்வாகி  ஒருவர் தெரிவித்தார்.

 அதை உறுதிப்படுத்தும் வகையில் வரும் வரும் 24 ந்தேதி வெள்ளிக்கிழமை மதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நடக்க உள்ளது. இதில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் தமாகா தலைவர்  ஜி.கே.வாசனும் கலந்து கொள்கின்றனர். ஆனால் தேமுதிக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

 இது பற்றி மதிமுக தரப்பில் கேட்டபோது அவங்களை கூப்பிட்டோம் ஆனால் அவர்கள் பதிலே சொல்லவில்லை, விஜயகாந்த் வரவில்லை என்றாலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரையாவது அனுப்பலாம் அதையும் செய்யவில்லை அவர்கள் ஒரு முடிவெடுத்திருக்கலாம் என்றார்.

இதன் மூலம் மக்கள் நலக்கூட்டணியை கைகழுவி தேமுதிக வெளியேறுவது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் இரண்டு தரப்பிலும்.




No comments:

Post a Comment