Sunday 5 June 2016

அயனாவரம் சாலை மறியல் 120 பேர் மீது வழக்குப்பதிவு


சென்னையில் அயனாவரத்தில் போலீஸ் வாகனம் மோதி 10 ஆம் வகுப்பு மாணவன் பலியான சம்பவத்தில் ஆவேசமடைந்த பொதுமக்கள் போலீஸ் வேனை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் 120 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியில் சேர்ந்த பள்ளி மாணவர்களான ராம் குமார் (16) மற்றும் அவனது நண்பன் சாலமன் நேற்று மாலை அந்த வழியாக வேகமாக வந்த காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்தனர். வேனை ஓட்டி வந்த காவலர்  ஏழுமலைகைது செய்யப்பட்டார்.
 மாணவன் பலியானதை பார்த்து ஆவேசமடைந்த பொதுமக்கள்  அயனாவரம்   ஆன்டர்சன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மறியலை கலைக்க போலீசார் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில்  பலர் காயமடைந்தனர். நிர்மலா என்ற பெண் முகத்தில் பெரிய அளவில் வெட்டுக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இறந்து போன மாணவன் ராம்குமார்  தந்தை விக்டர் சில மாதங்களுக்கு முன்னர் இறந்து போன நிலையில் ஒரே மகனான ராம்குமாரையும் அவனது தாயார் கவிதா பறிகொடுத்தார். பலியான ராம்குமார் சாலமன் இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வாகி தற்போது பதினொன்றாம் வகுப்பு செல்லவிருந்த நிலையில் விபத்தில் பலியாகியுள்ளனர். 
இந்நிலையில் நேற்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட போது அங்குள்ள போலீசார் தடியடி நடத்தினர்.அப்போது பேருந்துகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சாலை மறியல் செய்ததாக 100 பேர் மீதும், அரசு பேருந்தை தாக்கியதாக 10 பேர் மீதும், போலீஸ் வாகனத்தை தாக்கியதாஅக 10 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் இதுவரை 15 பேரி பிடித்துள்ளனர். வீடியோ காட்சி பதிவுகளை வைத்து மீதமுள்ளவர்களை பிடிக்கும் பணி நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். பிடிபட்டவர்கள் மீது அனுமதியின்றி கூடியது, பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment