Friday 10 June 2016

சென்னையில் பட்டபகலில் 50 லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளை- கடை உரிமையாளரை கட்டி போட்டு 3 ஆசாமிகள் கைவரிசை


சென்னையில்  ராயபுரத்தில் பட்டபகலில் 50 லட்சம் மதிப்புள்ள நகை பணம்  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகை கடை உரிமையாளரை கட்டி போட்டு 3 ஆசாமிகள் நகை பணத்தை பறித்து சென்றனர்.

சென்னை ராயபுரம் ஆதாம் சாகிப் தெருவில் வசிப்பவர் ரமேஷ்(50) . சொந்தமாக அடகு மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறாற். இவரது வீட்டின் உள்ளேயே கடையையும் நடத்தி வருகிறார். இவர் இன்று காலை 11 மணியளவில் வழக்கம் போல் தனது கடையில் இருந்தார். 

 அப்போது 3 டிப்டாப் ஆசாமிகள் கடைக்கு வந்துள்ளனர். தங்கள் வீட்டில் திருமணம் நடப்பதாக கூறி பத்திரிக்கையை காட்டிய அவர்கள் திருமணத்திற்கு அனைத்து வகை நகைகளையும் வாங்கலாம் என்று இருக்கிறோம் நகைகளை காட்டமுடியுமா என்று கேட்டுள்ளனர். ரமேஷும் உடனே அவர்களை உள்ளே அழைத்து அமரவைத்து அனைத்து நகைகளையும் காட்டியுள்ளார். 

அப்போது நகைகளை பார்ப்பது போல் பாவனை செய்த அந்த ஆசாமிகள் திடீரென கத்தியை காட்டி ரமேஷை மிரட்டி அருகிலிருந்த நாற்காலியில் கட்டி போட்டுள்ளனர். பின்னர் லாக்கரிலிருந்த ரூ.10 லட்சம் பணம் மற்றும் 100 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை திருடி சென்றனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் என ரமேஷ் தெரிவித்துள்ளார். 

ராயபுரம் காவல் நிலையம் அருகிலேயே பட்டபகலில் துணிகரமாக திருட்டை நடத்தியுள்ளனர். ராயபுரம் போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் கிடைக்கிறதா என சோதித்து வருகின்றனர்.

 திருடர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் தான் வழிப்பறி கூலிப்படை கொலைகளை எப்படி தடுக்க உள்ளோம் என கமிஷனர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment