Friday 10 June 2016

போஸ்ட் பாக்சில் கிடந்த பாஸ்போர்ட்கள் - சிபிஐ அதிகாரிகள் விசாரணை


சென்னை நங்கநல்லூரில் போஸ்ட் பாக்சில் கடந்த மூன்று நாட்களில் 50 க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்கள் கிடந்ததால் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மத்திய குடியுரிமை அமைச்சகம் சம்பந்தப்பட்டதால் சிபிஐ புலனாய்வு அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 சென்னை நங்கநல்லூரில் உள்ள தபால் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியில் கடந்த 2 ஆம் தேதி 23 பாஸ்போர்ட்கள் கிடந்துள்ளன. இதை பார்த்த தபால்காரர் அதை போஸ்ட் மாஸ்டரிடம் அளித்துள்ளார். பின்னர் மீண்டும் 6 ஆம் தேதி 16 பாஸ்போர்ட்டுகளும் 8 ஆம் தேதி 13 பாஸ்போர்டுகளும் கிடந்துள்ளன. இது குறித்து பழவந்தாங்கல் போலீசாரிடம் புகார் அளித்த போஸ்ட் மாஸ்டர் பாஸ் போர்ட்டுகளையும் ஒப்படைத்துள்ளார். 
   இதில் சென்னையில் உள்ள முகவரியில் 10 பாஸ்போர்ட்டுகளும், திருச்சி,தஞ்சை, மதுரை முகவரியில் உள்ள பாஸ்போர்ட்டுகளும் அமெரிக்க முகவரியில் ஒரு பாஸ்போர்ட்டும் இருந்துள்ளது.
இது குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி முதல் கட்டமாக சென்னை முகவரியில் உள்ள 10 பாஸ்போர்ட் உரிமையாளர்களுக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். 
 இந்த பாஸ்போர்ட்கள் அனைத்தும் விமான நிலையத்தில் காணாமல் போனதாக இருக்கலாம், அல்லது குடியுரிமை அதிகாரிகளால் பறிக்கப்பட்ட பாஸ்போர்ட்கள் குப்பையில் வீசப்பட்டு அது பொதுமக்களால் போஸ்ட் பாக்சில் போடப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத்தால் யார் போட்டது என்பதை அறிய முடியவில்லை.
 பாஸ்போர்ட் மத்திய அரசு மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பு உள்ளதால் உடனடியாக  மத்திய புலனாய்வு அமைப்பின் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் இது குறித்து விசாரணையில் நேரடியாக இறங்கியுள்ளனர். விசாரணை முடிவில் இதில் வேறு எதாவது அமைப்புகள் தொடர்பு இருக்குமேயானால் விசாரணை லோக்கல் போலீசாரிடமிருந்து சம்பந்தப்பட்ட துறைக்கு மாற்றப்படும் என காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  
 இது குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் கூறும் போது தற்போது பாஸ்போர்ட் போலீசார் வசம் உள்ளது. அது எங்கள் வசம் வரும்போது அது யாருடையது என்ன காரணத்தால் பாஸ்போர்ட் அங்கு போடப்பட்டது என்பது தெரியும். அனைத்து பாஸ்போர்ட் டேட்டாக்களும் எங்களிடம் உள்ளது. ஆகையால்  முழுத்தகவல் எங்களுக்கு கிடைத்துவிடும் என்று தெரிவித்தார்.
 சாதாரணமாக சாலையில் கிடக்கும் அளவுக்கு பாஸ்போர்ட் பராமரிக்கப்படுகிறது என்றால் அது முறையற்றவர்கள் கையில் போனால் என்ன ஆவது என்பது கவலைக்குரிய விஷயம்.

No comments:

Post a Comment