Wednesday 15 June 2016

திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தாரா கருணாநிதி?


 நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்குவதை ஒட்டி சென்னையில் இன்று திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கட்சித்தலைவர் கருணாநிதி தலைமையில் நடப்பதாக இருந்தது.  நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக காங்கிரஸ் அணி 98 இடங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 



ஆரம்பம் முதலே கட்சியின் செயல்பாடுகளில் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் பிரச்சனைகள் எழுந்துகொண்டே இருந்தது. கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைக்கும் விதமாக அழகிரியை கட்சிக்குள் மீண்டும் இணைப்பதில் ஸ்டாலின் முட்டுகட்டை போட்டார்.  கனிமொழி ,ராசா, தயாநிதி மாறன் பிரச்சாரத்துக்கு செல்ல கூடாது என தடைபோட்டார். ஆனால் கனிமொழி பிரச்சாரம் செய்வதை தடை செய்ய கருணாநிதி மறுத்துவிட்டார்.






 அ.ராசா குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டார். தயாநிதி மாறனுக்கு தனியே பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. செல்வியின் போராட்டத்தால் கருணாநிதியுடன் பிரச்சாரத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவரை கருணாநிதி பக்கத்தில் மேடையில் அமர தடை போடப்பட்டது. தேர்தல் வெற்றி என்ற குறிக்கோளால் அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களால் சகித்துகொள்ளப்பட்டது. 


 தேர்தல் தோல்விக்கு பின்னர்  காங்கிரசால் தான் தோற்றோம் என்ற வாதம் ஸ்டாலின் தரப்பால் முன்வைக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளராக உங்களை அறிவித்ததால் தான் கூடுதல் இடங்கள் கிடைக்கவில்லை என ஸ்டாலின் பிரச்சனை செய்ததாக கூட அறிவாலய வட்டாரத்தில் பேசப்பட்டது. திமுகவில் திடீரென முளைத்த அதிகார மையத்தின் அனைத்து அதிகார மீறல்களும் கருணாநிதியின் காதுக்கு மூத்த தலைவர்கள் கட்சி நிர்வாகிகளால் கொண்டு செல்லப்பட்டாலும் கருணாநிதி அமைதி காத்தார். 


இந்நிலையில் ராஜ்ய சபா எம்பிக்கள் தேர்தல் வந்தது. மோதலை உருவாக்க வேண்டாம் என கருணாநிதி நாகாரீகமாக இரண்டு தொகுதிகளில் திமுக போட்டியிடும் என அறிவித்தார். தனக்கு ராஜ்ய சபா சீட்டு கிடைக்கும் என தயாநிதி மாறன் பெரிதும் முயற்சி செய்தார். அதற்கு ஸ்டாலின், கனிமொழி தரப்பு ஒத்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வருத்தம். பின்னர் ஸ்டாலின் தரப்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி என அறிவிக்க கேட்டுகொள்ளப்பட்டது. கனிமொழி தனது ஆதரவாளரான டி.கே.எஸ்.இளங்கோவனை எம்.பி ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதி ஏற்று ஆளுக்கொரு எம்பி சீட்டை பிரித்து கொடுத்தார்.


 இதனால் டி.ஆர்.பாலுவுக்கு வருத்தம். இந்நிலையில் தான் எதிர்கட்சி வேட்பாளராக தொடர்வதில் கருணாநிதி உறுதியாக இருந்தார். ஆனால் ஸ்டாலின் தான் எதிர்கட்சித்தலைவராக ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கருணாநிதி அதற்கு ஒத்துகொள்ளாததால் கோபித்துகொண்டு செயற்கு கூட்டத்தை புறக்கணிக்க வேறு வழியில்லாமல் கருணாநிதி ஸ்டாலினை எதிர்கட்சித்தலைவராக்க ஒத்துகொண்டார். 

இப்படி நீறு பூத்த நெருப்பாக பல பிரச்சனைகள் ஓடிய நிலையில் பிறந்த நாள் கூட்டத்தில் ஸ்டாலின் கருணாநிதி பேச்சை கேட்டிருந்தால் வென்றிருக்கலாம் என்ற ரீதியில் மறைமுகமாக பேராசிரியர் அன்பழகன் பேசியது கட்சிக்காரர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. 

தேர்தலுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு எதிராக ஆவேசமாக பேசிய ஸ்டாலின் தனது வேகத்தை குறைத்து கொண்டார். ஆனால் திமுக தலைவர் என்ற முறையில் கருணாநிதி தினமும் ஆவேசமாக அறிக்கை விட்டு திமுகவை உயிர்ப்பாக நகர்த்தி வருகிறார். இந்நிலையில் நாளை சட்டமன்றம் கூட உள்ள நிலையில் திமுகவின் நிலைபாடு கட்சி எம்.எல்.ஏக்கள் செயல்படுவது பற்றி ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடப்பதாக இருந்தது.

 ஆனால் தலைமை தாங்க வருவதாக இருந்த திமுக தலைவர் கருணாநிதி கடைசி வரை வரவே இல்லை. இதோ வருகிறார், அதோ வருகிறார் என்று பல முறை ஆளனுப்பியும் வரவில்லை. கடைசியில் தனக்கு உடல் நிலை சரியில்லை தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மேல் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் துவங்கியது. 



தனக்கு என்ன உடல் நிலை அசௌகரியம் இருந்தாலும் தினம் இரண்டு வேலை அறிவாலயம் வருவது திமுக தலைவரின் வழக்கம். அதே போல் முக்கிய பிரச்சனை என்றால் செய்தியாளர்களை இருக்க சொல்லி பேட்டி அளிப்பார். தனது வயோதிக நிலையிலும் 16 வயது மனதுடன் இன்றும் அறிக்கை மற்ற விஷயங்களில் உயிரோட்டமாக இருப்பவர் கருணாநிதி. சட்டமன்றத்தில் திமுக ஆற்ற வேண்டிய பணியை அதுவும் வலுவான கட்சி எண்ணிக்கை எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வழிகாட்ட வராமல் இருப்பது தொடர் நிகழ்வுகளால் எழுந்த மனக்கசப்பின் புறக்கணிப்பாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment