Sunday 19 June 2016

சபாநாயகருடன் மோதல்-திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை வருகிறதா?


சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர்  உரைக்குப்பின் தள்ளிவைக்கப்பட்டது , இன்று மீண்டும் கூட உள்ளது. சட்டமன்றத்தில் அசுர பலம் பெற்றுள்ள திமுக சில கோரிக்கைகளை சபாநாயகர் முன்னர் வைத்தது. அதில் முக்கியமானது திமுக தலைவர் கருணாநிதியின் இருக்கை விவகாரம், திமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பளிக்கும் விவகாரம், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை செய்ய பெரிய அறை ஒதுக்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆகும்.

இது சம்பந்தமாக கடந்த வெள்ளியன்று சபை முடிந்தவுடன் சபாநாயகர் அறைக்கு ஸ்டாலின் தலைமையில் சென்ற எம்.எல்.ஏக்கள் கேட்டபோது வாக்குவாதம்  அதிகமாகி சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலர்  ஜமாலுத்தீனை திமுக எம்.எல்.ஏக்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் வரம்பு மீறி பேசியதாகவும் இதை எதிர்கட்சித்தலைவர்  ஸ்டாலின் தடுக்க முயற்சிக்க வில்லை என்று பின்னர் அறிக்கை விட்ட ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார்.



இது பற்றி பேட்டி அளித்த ஸ்டாலின் இரண்டு நாள் அவகாசம் தருவதாகவும் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவருடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்த அவை முன்னவர் ஓபிஎஸ் திமுக எம்.எல்.ஏக்கள் தரக்குறைவாக பேசியதாகவும் ஸ்டாலின் அதை தடுக்க முயற்சிக்கவில்லை என தன்னிடம் சபாநாயகர் வருத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.



இந்த விவகாரம் இன்று சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் என தெரிகிறது. இதில் சட்டமன்ற ஆரம்பத்திலேயே எதிர்கட்சியுடன் மோதல் வேண்டாம் சுட்டிக்காட்டுவதுடன் பிரச்சனையை முதல்வர் முடித்து கொள்வாரா?அல்லது உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் வருமா என்பது தெரியவில்லை. சபாநாயகர் அறைக்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடுவது என்பது சட்டமன்ற அவை நடவடிக்கையுடன் இணைத்தே பார்க்கபடும் என்பதால் சபாநாயகர் அதை எப்படி கையாளப்போகிறார் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பும். 

No comments:

Post a Comment