Monday 13 June 2016

வெடிக்கிறது சென்னையில் கோஷ்டி மோதல் - பொதுமக்கள் முன்னிலையில் மோதிக்கொண்ட திமுக எம்.எல்.ஏக்கள்





திமுக எம்.எல்.ஏக்கள் இருவர் பொதுக்கூட்ட மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கப்பாய்ந்தது சென்னையில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திமுகவுக்குள் கோஷ்டி போக்கு அதிகரித்து வருகிறது. தலைமைக்கு ஏற்றார் போல் உருவாக்கப்படுபவர்கள் தங்களது தலைமைக்கு எதிர் தலைமையுடன் மோதுவது வாடிக்கையான விஷயமாக திமுகவுக்குள் பார்க்கப்படுகிறது.
தலைவர் கருணாநிதிக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் நடக்கும் பனிப்போர், கனிமொழிக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் பனிப்போர் , கோஷ்டி பிரச்சனை காரணமாக ஒதுக்கப்பட்டு பதவி கிடைக்காதவர்கள் கோபம் என பல பிரச்சனைகள் திமுகவுக்குள்ளே இருந்தாலும் வெளியே இரும்புகோட்டை போல் அவ்வளவு ஒற்றுமையாக காட்டிகொள்வது தான் திமுகவின் தனிச்சிறப்பு.
ஆனால் அதையும் மீறி தலைநகர் சென்னையில் பொதுக்கூட்ட மேடையில் பல மணி நேரம் இரண்டு எம்.எல்.ஏக்கள் மோதிகொண்டனர். கிட்டதட்ட கைகலப்பு நடக்கும் சூழ்நிலையில் போலீசார் தலையிட்டு தடுத்து அனுப்பி உள்ளனர். இதில் ஒருவர் மாவட்ட செயலாளர் சேகர் பாபு, மற்றொருவர் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ ப.ரங்கநாதன்.
 இரண்டு நாட்கள் முன்பு இச்சம்பவம் நடந்துள்ளது.

இது பற்றி அங்குள்ள திமுக தொண்டர்களிடமும் , போலீஸ் தரப்பிலும், பொதுமக்கள் சிலரிடமும் நாம் விசாரித்த போது வந்த தகவல். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் ஜாயிண்ட் ஆபிஸ் அருகே திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ ஏற்பாட்டில் நடந்தது. இதில் தொகுதி எம்.எல்.ஏ பா.ரங்கநாதனும் கலந்துகொண்டார். விழா ஆரம்பத்தில் சினிமா பின்னணி பாடகர் கானா பாலா, மாலதி உள்ளிட்டோர் பங்குபெற்ற இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

அப்போது மேடைக்கு கீழே அமர்ந்திருந்த சேகர்பாபு உள்ளாட்சி தேர்தல் வருகிறது அதில் நல்ல ரிசல்ட் காண்பிக்கணும் இந்த தொகுதியில் அனைத்து வார்டுகளையும் வெல்லணும் என்று பேசியிருக்கிறார். அதை கேட்ட ஒரு தொண்டர் இதை ரங்கநாதன் காதில் நைசாக ஊத உடனே டென்ஷனான ரங்கநாதன் அதே வேகத்தில் சேகர்பாபு அருகில் வந்து யார் தொகுதியில் யார் முடிவு செய்வது,  அப்புறம் நான் எதற்கு இருக்கிறேன் என்று கேட்க சேகர்பாபு பதிலுக்கு நான் மாவட்ட செயலாளர் நான் ம்னுடிவு செய்ய உரிமை உள்ளது என்று கூற, இருவருக்கும் கிட்டத்தட்ட கைகலப்பு ஆகும் சூழ்நிலை உருவாக பாட்டு கச்சேரி நிறுத்தப்பட்டுள்ளது.
   நேரம் செல்ல செல்ல டென்ஷன் அதிகமாகி இரண்டு தரப்பிலும் ஆதராவாளர்கள் சேர பெரிய மோதல் ஏற்படும் பதற்றம் உருவாகியுள்ளது. போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தியுள்ளனர்.இந்த பிரச்சனை காரணமாக பொதுக்கூட்டம் நடக்காமல் பாட்டுக்கச்சேரி மட்டுமே நடந்துள்ளது. 10 மணிக்கு மேல் டென்ஷனுடன் கூட்டத்தை முடித்து சென்றுள்ளனர்.

அண்ணன் கிழக்கு மாவட்ட செயலாளர் அவருக்கு இல்லாத அதிகாரமா? என சேகர் பாபு தரப்பும், தொகுதி எம்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர், மூத்த உறுப்பினர் எங்க அண்ணனைவிட இவரு பெரிய ஆளா? என ரங்கநாதன் தரப்பிலும் தொண்டர்கள் பேசிக்கொண்டனர். சேகர்பாபு தரப்பும், ரங்கநாதன் தரப்பும் இருவரும் ஒருவரை ஒருவர் ஒழித்துகட்டுகிறோம் என்று சவால் விட்டு சென்றுள்ளனர் , இந்த நிலைமையில் எங்க உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்கிறது, என்று தொண்டர் ஒருவர் ஆதங்கத்துடன் கூறினார்.
பொதுக்கூட்ட மேடையில் நடந்த இந்த மோதல் கட்சித்தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரு தலைவர் ஆளு பழையவர், இவர் தளபதி ஆளு புதியவர் எங்கே நடவடிக்கை வரும் என்ற பேச்சு உள்ளூர் நிர்வாகிகள் மத்தியில் ஓடுது.

No comments:

Post a Comment