Thursday 16 June 2016

அவமானப்படுத்தப்படுகிறாரா கருணாநிதி? ஒரு அலசல்



தமிழக அரசியலில் பல்வேறு தலைவர்கள், கட்சிகளின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து பார்த்தால் அவை அனைத்திலும் கருணாநிதி பங்குபெற்றிருப்பார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் உருவான அரசியலில்,  தமிழகத்தில் அரசியல் களத்தில் இயங்கி கொண்டிருக்கும்  சில தலைவர்கள் மட்டுமே உள்ளனர். சங்கரய்யா, நல்லக்கண்ணு , கருணாநிதி.


 சங்கரய்யா, நல்லக்கண்ணு வயோதிகம் காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி விட இன்றும் அப்டேட்டாக இருக்கிறார் கருணாநிதி.

ஒன்று பட்ட சென்னை மாகாண அரசியலில் திமுக போட்டியிடவில்லை என்ற முடிவெடுத்ததால் 1952 ல் முதல் பொது தேர்தலில் கருணாநிதி  போட்டியிடவில்லை. ஆனால் அதன் பிறகு 1957 குளித்தலை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த கருணாநிதி 1984 தேர்தல்(1984 ல் எம்.எல்.சியாக இருந்தார்)  தவிர அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டவர்.  ஒரு தேர்தலிலும் தோல்வியை தழுவாதவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.


தற்போது 2016 தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்யாசத்தில் (68 ஆயிரத்திற்கும் மேல்) வென்றவர் என்ற பெருமையும் கொண்டவர்.

 தமிழக அரசியலின் தவிர்க்க இயலாத சக்தியாக இன்றும் வலம் வந்துகொண்டிருக்கும் கருணாநிதியின் அறிக்கை இன்றும் எதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி கொண்டுத்தான் இருக்கின்றது. புதிதாக ஒன்றை  கற்றுகொள்ளும் போது நீ வளர்ச்சியடைகிறாய் என்ற பொதுமொழி ஒன்று உண்டு .  இதற்கு முற்றிலும் பொறுத்தமானவர் என்றால் அது கருணாநிதி மட்டுமே. பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவர் பள்ளிக்கு வெளியே உலகத்தை படித்தார்.


 தமிழ் இலக்கியம் வரலாறு அவருக்கு கைகொடுத்தது. கருணாநிதியை படைப்பாளி இல்லை என்று சொல்பவர் உண்டு ஆனால் அவரது குறளோவியம் என்றும் நீடித்து நிற்கும்.

நிர்வாகத்திறமை என்றால் அது கருணாநிதி தான் என்று இன்றும் அதிகாரிகள் மத்தியில் பேசப்படுவது உண்டு. குடும்ப அரசியல், சுயநலம் என பல்வேறு கருத்துகள் கூறப்பட்டாலும் 67 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் அங்கமாக பல்வேறு சோதனைகளில் திமுகவை வழி நடத்தி இன்றும் வழிநடத்திகொண்டிருக்கிறார். மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரி அனைவரும் மு.க என்ற அளவுகோலால்தான் இன்றும் பார்க்கப்படுகின்றனர்.


மாநிலம் முழுதும் கட்சிக்காரர்களை அரவணைத்து அவர்கள் பிரச்சனையை  தீர்த்து கட்சியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கருணாநிதி வயோதிகம் காரணமாக ஒதுக்கப்படுகிறார் என்பது வெளிப்படையாக தெரிய துவங்கியுள்ளது. மாற்றுகட்சிக்காரர்களையும் ஓரணிக்குள் கொண்டு வந்து ஆட்சியை கைப்பற்றும் வித்தை தெரிந்த கருணாநிதியின் தலைமை தடுமாறியபோது தான் விஜயகாந்த் போன்றவர்கள் ஒதுங்கினர். இல்லாவிட்டால் அதிமுகவுக்கு எதிராக ஒரு வலுவான அணியை அவர் அமைத்திருப்பார் என்று அனைவரும் ஒத்துகொள்கின்றனர்.

கட்சியில் தமிழக அரசியலில் சுறுசுறுப்புக்கு பெயர் போனவர் கருணாநிதி. இளம் அரசியவாதிகள் அவரிடமிருந்து கற்றுகொள்ளவேண்டியது ஏராளம். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைதளங்களை பயன் படுத்த துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அதை வெற்றிகரமாக பயன்படுத்த ஆரம்பித்தவர் கருணாநிதி. இன்றும் அரசியல் களத்தில் ராமதாஸ், வைகோ போன்ற தலைவர்கள் அறிக்கை விட்டாலும் கருணாநிதியின் அறிக்கைக்கு மட்டுமே ஜெயலலிதா மதிப்பு கொடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.


சட்டமன்ற கட்சித்தலைவராக அவர் நீடிக்க விருப்பம் தெரிவித்தது அவரது கட்சியிலே நிராகரிக்கப்பட்டது அவருக்கு கிடைத்த முதல் அவமானம். பல பத்தாண்டுகள் கோலோச்சிய சட்டமன்ற நிகழ்வுகளில் எப்போதும் பங்கேற்பதை கருணாநிதி பெரிதும் விரும்புவார். ஆனால் அவருக்கான முறையான இருக்கையை வழங்காமல் ஐந்தாண்டுகள் ஒதுக்கிய ஆளுங்கட்சியின் சிந்தனையில் லேசாக மாற்றம் வர துவங்கியுள்ளது சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அவருக்கான இருக்கையை இரண்டாம் இடத்தில் ஒதுக்கியது தமிழக அரசு இது இரண்டாவது அவமானம்.



 இது முதல்வருக்கு தெரியுமா அல்லது முதல்வர் மனம் குளிருவார் என அதிகாரிகள் செய்தார்களா தெரியாது. தமிழக சட்டமன்றம் ஆரம்பித்தது முதல் அதன் உறுப்பினராக கடமை ஆற்றிவரும் மூத்த தலைவர்.  முதல்வராக ஐந்துமுறை மக்களால் தேர்வு செய்யப்பட்டு செயலாற்றியவர் அந்த வகையிலாவது அவருக்கு முதல் வரிசையில் இடம் தர வேண்டும். மரபுகள் இடம் தராது என்பதெல்லாம் இந்த விஷயத்தில் பார்க்ககூடாது. மூத்த அரசியல்வாதி  அவருக்கு இருக்கை ஒதுக்காமல் அவரை அவமானப்படுத்துவதாக அரசு நினைத்தால் அது தமிழக அரசுக்குத்தான் அவமானமாக வரலாற்றில் பார்க்கப்படும்.


முதல்வர் ஜெயலலிதா அரசியல் மாச்சர்யங்களுக்கு இடம் தராமல்  பதின்மூன்று முறை தோல்வியுறா மூத்த  சட்டமன்ற உறுப்பினருக்கு சரியாசனம் அளித்தால் அது மக்கள் மனதில் வரவேற்கப்படும் விஷயமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

No comments:

Post a Comment