Thursday 16 June 2016

ஐஏஎஸ் மாற்றத்தை தொடர்ந்து வருது ஐபிஎஸ் - விடுப்பில் செல்கிறாரா டிஜிபி?


தமிழகம் முழுதும் 26 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றியுள்ளது தமிழக அரசு இதையடுத்து இந்த மாற்றம் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியிலும் வர உள்ளதாகவும் டிஜிபி அஷோக்குமார் விடுப்பில் செல்லலாம் எனவும் போலீஸ் வட்டாரத்தில் தகவல் ஓடுகிறது.


தமிழகம் முழுதும் 26 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதா ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். சமீபத்தில் யாருமே எதிர்பாராத வண்ணம் தலைமை செயலாளரையே மாற்றினார். முதல்வரின் தனிச்செயலாளர்களும் மாற்றப்பட்டனர்.

 இந்த மாற்றம் தொடரும் என எதிர்ப்பார்க்கபட்ட நிலையில்  நேற்று  சட்டமன்றம் முதல் கூட்டத்தொடர் நடந்தது. கூட்டம் முடிந்த நேற்று மாலையே 26 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.  மாற்றப்பட்டவர்கள் தவிர ஐபிஎஸ் உயர் அதிகாரிகள் மாற்றமும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வரும் டிஜிபி அஷோக்குமார் விடுப்பில் அனுப்பப்படுவார் என்றும் அதே நேரம் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டு கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கை கவனிப்பார் என்றும் போலீஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. நவம்பர் மாதம் அஷோக்குமார் ஓய்வு பெறும் போது தானாக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் வருவார் என்று போலீஸ் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.


 இதே போல் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாற்றம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்ட பல ஐபிஎஸ் அதிகாரிகள் மீண்டும் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

No comments:

Post a Comment