Friday 17 June 2016

இசைப்பிரியா பற்றிய படம் - உறவினர்கள் சம்மதம் வாங்க நீதிமன்றம் உத்தரவு



இலங்கை போரில் கொடூரமாக கொல்லப்பட்ட இசைப்பிரியா பற்றிய திரைப்படத்தை வெளியிட உறவினர்களிடம் சம்மதம் பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில்,  ஷோபா என்ற இசைப்பிரியா என்பவர் இலங்கை ராணுவத்தினரால்  பாலியல் வன்முறைக்கு உள்ளக்கப்பட்டு , கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து, கே.கணேசன் என்பவர்   இயக்கத்தில்   ஏ.சி.குருநாத் செல்லசாமி ‘’ போர்க்களத்தில் ஒரு பூ என்ற  திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கொடூரமாக பாலியல் வன்முறை உள்ளிட்ட காட்சிகள் இடம்  பெற்றுள்ளதால் இந்த படத்தை பொதுமக்களுக்கு திரையிட்டு காட்ட அனுமதிக்க முடியாது என்று சென்சார் போர்டு மறுத்துவிட்டது.


   இலங்கை போரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் தாயார் தர்மினி வாகிசன், மூத்த சகோதரி    டி.வேதரஞ்சனி,  ஆகியோர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  அவர்களது மனுவில்  2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது, இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டோம். நான் என் 3 குழந்தைகளுடன் வசிக்கிறேன்.

இந்த நிலையில், என் தங்கை இசைப்பிரியா என்ற ஷோபா போர்களத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து  போர்க்களத்தில் ஒரு பூ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் மூலம் தெரிந்துக் கொண்டோம்.
 அந்த திரைப்படத்தில், என்னையும், என் தங்கை இசைப்பிரியாவையும் போராளிகள் என்று சித்தரித்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது போராளிகளை உலக நாடுகள் தீவிரவாதிகள் என்று அழைக்கின்றனர். இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட பலர் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்கின்றனர்.

அவர்கள் நாகரீகமாகவும், மரியாதையுடனும் வாழ உரிமை உள்ளது. அதே உரிமை எங்களுக்கும் உள்ளது. ஆனால், இந்த திரைப்படம் வெளியானால், எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

  இந்திய நாட்டின் சட்டத்தின், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் எந்த ஒரு அடையாளத்தையும் ஊடகங்கள் மூலம் வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.  எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிவஞானம்,  படத்தை வெளியிடுவது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் குருநாத் செல்லசாமி, இயக்குனர் கணேசன் ஆகியோர் லண்டனில் உள்ள இசைப்பிரியாவின் தாயார் மற்றும் அவருடைய சகோதரியிடம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசி தீர்வு காண வேண்டும்.

 அதற்காக நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மைத்தில் வரும் திங்கள் கிழமை மாலை 3 மணிக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் நடத்துவதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பான முடிவுகளை அறிக்கையாக நீதிமன்றத்தில் வரும் 23 ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment