Tuesday 7 June 2016

ஆளுநர் ரோசையா, முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு -ஈவிகேஎஸ் . இளங்கோவனுக்கு சம்மன்

ஆளுநர் ரோசையா, முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ஆகஸ்டு 4 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு சம்மன் அனுப்ப சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  

இதுதொடர்பாக, ஆளுநர் ரோசையா, முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில், சென்னை மாநகர அரசு வக்கீல் எம்.எல். ஜெகன் தாக்கல் செய்த  மனுக்களில் கூறியிருப்பதாவது 


தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. இதில் பங்கேற்ற,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில், தமிழக ஆளுநர் ரோசையா, துணை வேந்தர் நியமனத்தில்  பணம் பெற்றதாகவும், அவ்வாறு வாங்கிய தொகையில், ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, மீதியை முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இளங்கோவனின் இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானது. வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் அவதூறாக பேசியுள்ளார். ஆளுநர் என்பவர் எந்த கட்சியையும் சாராத பொதுவான நபர். அவரைப் பற்றியும், முதல் அமைச்சரின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், தமிழக அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்திலும் அவதூறாக அவர் பேசியுள்ளார். மேலும், எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவுக்கு எடுபிடியாக இருக்கும்போது, அவர்களை பற்றி மக்களிடம் எடுத்துதான் கூறுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈவிகேஎஸ். இளங்கோவன் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் உண்மைக்கு மாறாக, குற்றம் சுமத்தியுள்ளார். அவரது இந்த பேட்டியானது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன் கீழ், தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எனவே, இளங்கோவன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுகளில் கூறியுள்ளார்.

இந்த மனுக்களை, சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார். மனுக்களில் கூறியுள்ள அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் இருப்பதால், இதுகுறித்து விளக்கம் அளிக்க ஆகஸ்டு 4 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு ஈவிகேஎஸ் . இளங்கோவனுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment