Monday, 27 June 2016

போலீசார் தொல்லை - ஸ்வாதியின் தாயார் முதல்வர் தனிப்பிரிவில் புகார்



கம்ப்யூட்டர் என்ஜினியர் ஸ்வாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டு 5 நாட்கள் ஆகியும் கொலையாளி பிடிபடவில்லை. கொலைக்கான காரணமும் இதுவரை போலீசாரால் தெளிவாக சொல்ல முடியவில்லை. 

இன்ஃபோசிஸ் ஊழியர், பெண் ஐடி ஊழியர் போன்ற காரணங்களால் இந்த விவகாரம் வட இந்திய ஊடகங்களிலும் பெரிதாக்கப்பட்டது. இதனால் காவல் துறையினருக்கு கடும் நெருக்கடி உருவானது.

ஸ்வாதி கொலை மூலம் காவல்துறை, ரயில்வேத்துறையின் இயலாமை வெளிப்பட்டுள்ளது. இது கடுமையாக பொதுமக்கள் மத்தியில் விமர்சிக்கப்படுகிறது. மறுபுறம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் , டுவிட்டர்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

 எதிர்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையிலெடுத்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். போலீசாருக்கு இதனால் கடுமையான நெருக்கடி உண்டாகியுள்ளது. இதில் கூடுதலாக கொலை செய்யப்பட்ட ஸ்வாதியின் குடும்பத்தாரே முதல்வர் தனிப்பிரிவில் போலீசார் மீது புகார் அளித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் தனிப்பிரிவில் ஸ்வாதியின் தாயார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தங்கள் குடும்பம் ஸ்வாதியின் கொலையால் மிகுந்த துன்பத்துக்குள்ளாகி உள்ளது. இதில்  குற்றவாளிகளை பிடிப்பது மட்டுமே ஆறுதல், ஆனால் போலீசார் குற்றவாளியை பிடிப்பதை விட்டு விட்டு விசாரணை என்ற பெயரில் தங்களை நோகடிப்பதாக புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளியை பிடிக்க உத்தரவிடும்படி கேட்டுகொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment