Monday, 27 June 2016

கொலைகாரன் பற்றி ஏற்கனவே புகார் அளித்திருந்தாரா ஸ்வாதி? - திடுக்கிடும் தகவல் அம்பலம்



நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினியர் ஸ்வாதி வழக்கில் பல்வேறு யூகங்கள் கிளம்பினாலும் இதுவரை குற்றவாளி குறித்த தகவல் பிடிபடாத புதிராகவே உள்ளது.

ரயில்வே போலீசாரின் புலனாய்வு சரிபட்டு வராத நிலையில் உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்க மறுபுறம்  அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்ய கடுமையான நெருக்கடிக்கு ஆளான தமிழக அரசு ரயில்வே போலீசாரிடமிருந்து விசாரணையை சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு மாற்றியது.

தற்போது சட்டம் ஒழுங்கு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ள நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தனது மகள் மரணத்துக்கு காரணமான கொலையாளிகளை பிடித்து தர கோரிக்கை விடுத்துள்ள ஸ்வாதியின் தந்தை தனது மகளின் கொலைச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தயவு செய்து போலீசாருக்கு தங்களுக்கு தெரிந்த தகவல்களை அளியுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதே போல் ஸ்வாதிக்கு ஆரம்பத்திலிருந்தே மிரட்டல் இருந்துள்ளது, தன்னை பின் தொடர்ந்தவன் பற்றி கடந்த மே மாதமே தன்னிடம் புகார் அளித்ததாக ஸ்வாதியின் தந்தை தெரிவித்ததாக ஆங்கில சானல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்வாதிக்கு தொடர்ந்து ஆபத்து இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஸ்வாதி தனக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறித்து ஏற்கனவே முறைப்படி புகார் எதாவது அளித்துள்ளாரா அது சூளைமேடு காவல் நிலையத்திலா, அல்லது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலா என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். ஸ்வாதியின் புகாரை அன்று விசாரித்த போலீசார் மற்றும் புகாரின் தன்மை, அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை, புகார் முடித்து வைக்கப்பட்டதா போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.

ஒரு வேலை புகார் அலட்சியமாக கையாளப்பட்டிருந்தால் அதற்கான விடையையும் போலீசார் தான் கண்டுபிடிக்கவேண்டும். 

No comments:

Post a Comment