Thursday 23 June 2016

கொள்ளைகளை தடுக்க காவல்துறையின் சி”ரி”ப்பு போலீஸ் திட்டம்



  ஒரு பிரச்சனைக்கு அடிப்படை என்ன என்பதை ஆராய்ந்து அதை கலையாமல் வேறொன்றை காட்டி தாங்கள் தப்பித்து கொள்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்  போலீஸ் உயர் அதிகாரிகள்.

 ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு அடுத்தபடியாக இருப்பதாக கூறிக் கொள்ளும் தமிழ் நாடு காவல்துறை  தற்போது சென்னையில்  தினந்தோறும் நடக்கும்  கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி  காரணமாக தடுமாறி நிற்கிறது.



தங்கம் வெள்ளி விலை நிலவரம் போல "சென்னையில் இன்றைய குற்ற நிலவரம்" என்ற தலைப்புகளில் செய்தி செய்தித்தாள்களில் தினந்தோறும் தலைப்புச்செய்திகளாய் குற்றச்சம்பவங்கள் மாறிவருகின்றன.

தனியாக வசிக்கும் முதியவர்கள், பெண்கள்  கொலை, அடுக்குமாடி குடியிருப்பில் கொலை, டாக்டர் கொலை, நகைக்காக பெண் கொலை, ரவுடி ஓட ஓட வெட்டி கொலை, வழக்கறிஞர்கள் கொலை, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் கொலை, நகைக்கடை அதிபர் கொலை என  வரிசை நீண்டு கொண்டே செல்கிறது.


சென்னையில் சர்வ சாதாரணமாக தினமும் நடக்கும் குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் .இந்த குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள உயர்  அதிகாரிகள் தடுக்க என்ன செய்வது என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். ஆனால் எதையாவது செய்தோம் என்று முதல்வரிடம் காட்டிக்கொள்ள வேண்டுமே அதனால் ஒரு வினோதமான திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

அந்த வினோத திட்டத்தின் பெயர்தான் "சைக்கிளிங் போலீஸ்"  இதன் மூலம் ஸ்டேஷன்களில் போலீசார் ரோந்து செல்ல சைக்கிள் வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் 2 சைக்கிள் வழங்கப்படும் . இந்த திட்டம் விரைவில் முதல்வரால் துவக்கி வைக்கப்பட உள்ளது.


போலீசார் மத்தியில் நகைப்புரியதாக ஆகிவிட்ட இந்த திட்டம் மூலம்  பிரச்சனைகளை திசை திருப்பும் செயலை செய்து முதல்வருக்கும்  தவறாக வழிகாட்டும் வேலையை செய்யும் முயற்சியில் உயர் அதிகாரிகள் இறங்குவதாக போலீசார் மத்தியில் பேச்சு ஓடுகிறது.

திருட்டு சம்பவங்களில், கொலை, கொள்ளை , செயின் பறிப்புகளில் ஈடுபடும் குற்றவாளிகள் நவீன அதிக திறன் 200 சிசி இருசக்கர வாகனங்களை பயன் படுத்தி தப்பி செல்கின்றனர்,  ஆனால் அவர்களை துரத்தி பிடிக்க போலீசருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனம் சைக்கிள்.

சென்னை காவல் நிலையத்தில் போலீசாருக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் , இன்னோவா ரோந்து வாகனத்தை ஓட்ட் போலீசார் இல்லாமல் வாகனங்கள் ஓரங்கட்டி நிற்கிறது. அதற்கு காரணம் போலீசார் பற்றாகுறை. பீட் ஆஃபீசர் அவருடன் ஒரு போலீஸ் ரோந்து செல்லும் முறை மாறி இன்று ரோந்து வாகனத்தை ஓட்டவே போலீஸ் இல்லை இதில் எங்கிருந்து சைக்கிளை ஓட்டுவது என போலீசார் மத்தியில் பேச்சு ஓடுகிறது.


40 வயதை கடந்து 50 வயதை நெருங்கும் நாங்கள் இந்த நேரத்தில் இவ்வளவு நெரிசலான டிராபிக்கில் சைக்கிளில் யூனிஃபாரத்தை மாட்டிகிட்டு போனால் அது சாத்தியமா, உடல் தான் ஒத்துழைக்குமா என்று கேட்கின்றனர் போலீசார்.


காவல்துறை நவீன முறைக்கு மாற வேண்டும் , நவீன கருவிகள், சைபர் குற்றங்களை தடுக்கும் நவீன வசதிகள் அதற்கான பயிற்சிகள், சென்னை போன்ற பெருநகரங்களில் குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அதை இணைக்கும் நெட்வர்க் மொபைல் போலீஸ் என அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் 1960 க்கு காவல் துறையை அழைத்து செல்லும் இந்த அதிகாரிகளை நினைத்து அழுவதா? , சிரிப்பதா? என தெரியவில்லை.

No comments:

Post a Comment