Friday 17 June 2016

அமைதிப்பூங்கா தமிழகத்தில் ஐந்துகொலை -தலையெடுக்கும் கூலிப்படையினர்


அமைதி  பூங்கா தமிழகத்தில்  ஒரே நாளில் ஐந்து கொலை
 தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக சட்டமன்றத்தில் கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கூலிப்படைக்கொலை , கொள்ளை , திருட்டு, வழிப்பறி அதிகரித்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை என பொதுமக்கள் கூறுகின்றனர்.


 தலைநகரம் சென்னையில் கூலிப்படை கும்பல் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வடமாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கூலிப்படை கும்பல் யானைக்கவுனியில் ட்ராவல்ஸ் அதிபரை சுட்டு கொன்றது. அதில் கூலிப்படை கும்பலை பிடித்து வந்தனர். ஆனால் கூலிப்படையை யார் ஏவியது என்பதை கூட இதுவரை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. எழும்பூர் பெண் டாக்டர் கொலையில் நகைப்பணம் திருட்டு போகவில்லை. பத்திரங்களை திருடி சென்றனர். அப்படியென்றால் பத்திரத்துக்காக கூலிப்படையை அனுப்பியது யார் என்பது பற்றி எந்த விசாரணையும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் நகைக்காக திருட வந்த இடத்தில் கொலை நடந்ததாக வழக்கு முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  


ஆர்.டி.ஆர்வலர் ஒருவர் பட்டபகலில் வெட்டி கொல்லப்பட்டார். அதுவும் கூலிப்படையின் மூலம் நிறைவேற்றப்பட்ட கொலை. பின்னர் கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் முருகன் வெட்டிகொலை செய்யப்பட்டார். கூலிப்படை மூலம் கள்ளக்காதலன் செய்த கொலை.  டாஸ்மார்க் பாரில் கொலை , கவுரவ கொலை என தொடர்ந்து நடக்கிறது.

 சாலையில் நடந்து செல்லும் பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியாத நிலையில் ஒரே நாளில் ஐந்தாறு இடங்களில் செயின்பறிப்பு சம்பவங்கள், செல்போன்களை பறித்து செல்வது, வீடு புகுந்து திருடுவது  என சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.


நேற்று  ஒரே நாளில் தமிழகத்தில் ஐந்து கொலைகள் நடந்துள்ளது. காலையில் வாகன சோதனையில் திருடார்களை மடக்கி பிடித்த போலீஸ் ஏட்டு முனுசாமி, எஸ்.ஐ.நாகராஜ், இன்னொரு காவலர் கொள்ளையர்களால் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் முனுசாமி உயிரிழந்தார். எஸ்.ஐ.நாகராஜ் உயிருக்கு போராடி வருகிறார்.
 திருப்பூரில் பட்ட பகலில் வாலிபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். அலங்காநல்லூரில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். புழல் காவாங்காரையில் வழக்கறிஞர் அகிலன் என்பவர் பட்ட பகலில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.



 நெல்லை பேட்டை அருகே கோடீஸ்வரன் நகர் நஸ்ரின் கணவன் மனைவி சண்டையில் குத்தி கொலைசெய்யப்பட்டார்.  தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறையின் மீதான நம்பகத்தனமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. மறுபுறம் என்ன தான் நவீன விஷயங்கள்காவல்துறையில் புகுத்தப்பட்டாலும் காவலர் பற்றாகுறை என்பது எல்லா காவல் நிலையங்களில் முக்கிய பிரச்சனையாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

மற்றொரு புறம் சமீப காலமாக கடந்த சில வருடங்களில் நடந்த குற்றச்சம்பவங்களை கணக்கெடுத்து பார்க்கும் போது நடக்கும் கொலை கொள்ளைகளில் கைது செய்யப்படுவதற்கும் , தண்டனை பெற்று தருவதற்கும் உள்ள வித்யாசங்கள் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசமாக உள்ளது. ஓராண்டில் 1000 கொலைகள் நடந்தால் கைது செய்யப்படும் குற்றவாளி சில மாதங்களில் வெளியே வந்து விடுகின்ற்னர்.  பல ஆண்டுகள் வழக்கு நடந்த பின்னர் குற்றங்களில் தண்டனை வாங்கித்தரப்பட்டதா என்று பார்த்தால் 5% கூட இல்லை எனபது நிதர்சனமான உண்மையாக உள்ளது.
அதிலும் கூலிப்படையினர் செய்யும் கொலைகள் அவர்களுடனே முடிக்கப்படுகிறது. இதனால் முக்கிய குற்றவாளி தப்பிக்கிறார். இதற்கு காரணம் முக்கிய குற்றவாளியை தேடி வழக்கை நீட்டித்து செல்வதை விட வழக்கை எளிதாக முடித்துவிடலாம் என போலீசார் எண்ணுவதும் அளவுக்கு அதிகமான பணிச்சுமையுமே காரணம் என கூறப்படுகிறது.



இவைகளை களைய அரசு மட்டுமே முயற்சி எடுத்தால் போதாது சமுதாய பிரச்சனையாகவும் இது பார்க்கப்பட வேண்டும் என்கிறார்கள் மன நல மருத்துவர்கள். குற்றம் செய்தால் சாதாரண தண்டனை அதைவிட எளிது தண்டிக்கப்படாமல் தப்பிப்பது , வசதியான வாழ்க்கை என்ற எண்ணம் நடைமுறை தொடர்ந்தால் அமைதிப்பூங்கா என்பதெல்லாம் கேள்விக்குறியே.

No comments:

Post a Comment