Friday 17 June 2016

முதல் கோணல் சபாநாயகருடன் மோதல் - திமுகவினர் மீது அவை நடவடிக்கை வருகிறதா?



இன்று சட்டமன்றம் முடிந்தவுடன் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது கருணநிதி வருவதற்கு வசதியாக வீல் சேர் வர வசதி செய்து தர வேண்டும், 89 எம்.எல்.ஏக்கள் அமர்ந்து ஆலோசனை நடத்த பெரிய அறை வேண்டும், முதல்வர் பதிலளிக்கும்  அன்று எதிர்க்கட்சித்தலைவர் பேச அனுமதிக்க வேண்டும், கவர்னர் உரை மீது 3 உறுப்பினர்கள் பேச அனுமதிக்க கேட்டோம் ஆனால் சபாநாயகர் எதையும் கேட்பதாக தெரியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அவர் பேட்டி அளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சபாநாயகர் தனபால் அறையில் நடந்த மோதல் விவகாரம் தான் தற்போது வெடித்து கிளம்பி உள்ளது.  கருணாநிதிக்கு இருக்கை ஒதுக்குவது உட்பட கோரிக்கைகள் குறித்து பேச சபாநாயகர் தனபால் அறைக்கு எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களும்சென்றுள்ளனர். அப்போது பேச்சுவார்த்தை முற்றி சில திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரையும், சட்டசபை செயலர் ஜமாலுத்தீனையும் அளவுக்கு அதிகமாக விமர்சனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் உடனிருந்துள்ளார்.


இந்த விவகாரம் உடனடியாக முதல்வர் காதுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சபாநாயகர் அறைக்குள் நடந்த விவாதங்களை விமர்சனங்களை ஆளுங்கட்சி எவ்வாறு எடுத்துகொள்ளப்போகிறது எனபது வரும் திங்கட்கிழமை சபை கூடும்போது தெரியவரும் என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்தார். திமுக என்னதான் 89 எம்.எல்.ஏக்களை கொண்ட எதிர்கட்சி என்பதால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை எப்படி அனுமதிப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


 இந்த விவகாரத்தில் சட்டமன்ற சபாநாயகர் அறையில் பிரச்சனை நடந்தாலும் இது அவை நடவடிக்கை போன்றுதான் பார்க்கப்படும், அதனால் சபாநாயகர் அறையில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் மீது சபாநாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம், ஏன் உரிமை மீறல் பிரச்சனையாகவே கூட கொண்டு வரலாம் ஏற்கனவே இதற்கு முன்னுதாரணங்கள் உண்டு என அனுபவமிக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

 மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவர் அவர் இதுபோன்ற விவகாரங்களை விரும்பாதவர், அவர் இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது தேவையற்ற ஒன்று இதுபோன்ற வாக்குவாதங்களை தவிர்த்திருக்க வேண்டும் என மூத்த செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் சபாநாயகர் இந்த பிரச்சனையை பெரிதாக கையில் எடுக்கலாம் அல்லது முதல் முறை என்பதால் ஒரு எச்சரிக்கை அறிவிப்போடும் விடலாம் எதுவும் சபாநாயகர் கையில் உள்ளது, அவர்கள் வாக்குவாதம் செய்து விட்டு வந்தது வானலாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகரிடம் ஆகவே எந்த முடிவும் சபாநாயகர் கையில் தான் உள்ளது. திங்கட்கிழமை அதற்கு விடை கிடைக்கும் என்றார்.


இந்த விவகாரம் எச்சரிக்கையோடு முடியுமா அல்லது பெரிதாகுமா திங்கட்கிழமை தெரியவரும். முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிவிடாமல் ஜனநாயக பூர்வமாக மக்கள் பணி ஆற்றிடவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்.

No comments:

Post a Comment