Thursday 16 June 2016

நேர்மையான எஸ்பி அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்டாரா?- குமுறலில் விருதுநகர் போலீசார்


விருது நகர் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் பட்டியலை எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த அடிப்படையில் விருது நகர் மாவட்டத்தில் தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் நேர்மையாக தனது பணியை செய்த எஸ்பி அரவிந்தன்  முதல் எஸ்.ஐ வரை 12 காவல் அதிகாரிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர். 



ஏடிஎஸ்பி அருண்கோபாலன் உள்ளிட்ட 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐக்கள், பணியிடமாற்றம் என்ற பெயரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விருது நகரில் நேர்மையாக செயல்பட்டு பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் இடையே நன்மதிப்பை பெற்ற இளம் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.பி  அரவிந்தன் கட்டாயவிடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.



யார் இந்த அரவிந்தன் ஐபிஎஸ்....

அரவிந்தன் IPS, இந்த பெயரை தெரியாதவர்களே திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்க முடியாது என்னுமளவிற்கு மிகச் சிறந்த அதிகாரியாக செயல்பட்டவர். முதல் தேர்விலேயே IPS தேர்வில் வெற்றி பெற்று தென்காசிக்கு பணிக்காக வந்தார். ஒரு அதிகாரியாக இல்லாமல் இங்குள்ள மனிதர்களில் ஒருவராக அனைவரையும் நேசித்த நேர்மை , இவரது கொள்கை அதனால் மக்கள் மத்தியில் பிரபலமானார். 



தென்காசியில் முதன் முதலாக இவர் பொறுப்பேற்ற புதிதில் குற்றாலத்தின் நிலையை பார்த்து  குற்றாலம் சுத்தமாக இருக்க மிகுந்த சிரமம் எடுத்து செயல்பட்டார். உயர் நீதி மன்ற கிளை உத்தரவை செயல்படுத்திட  இரவு பகலாய் குற்றாலத்தில் நேரடி பணி செய்தார் ஏதாவது சம்பவத்தை கேள்விப்பட்டால் யாரிடமாவது சொல்லி போய் பாருங்கள் என்று சொல்வதைவிட இதோ வந்து கொண்டிருக்கிறேன் என்ற பதிலைத்தான் அதிகமாக இவரிடமிருந்து வருமாம். 



 பள்ளி மாணவர்களை அதிகம் நேசித்த இவர் பள்ளி மாணவர்கள் , மாணவிகள் பலரை நல்வழிப்படுத்தி அவர்களை IAS ,IPS தேர்வை எழுத ஊக்கப்படுத்த வேண்டும் என அடிக்கடி பள்ளிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் உரையாடுவாராம். குடிமைப்பணித் தேர்வுகள் எப்படி எழுதுவது? படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, விளையாட்டும் நமக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று, என்னென்ன படிப்புகளுக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது? போன்ற தலைப்புகள், கிராமத்து மாணவர்களின் கேள்விகள் என அனைத்துக்கும் சலிக்காமல் மாணவர்களுக்குப் புரியும்படி நகைச்சுவையுடன் எடுத்துரைப்பது இவருக்கு மட்டும் கைவந்த கலை என பள்ளியின் ஆசிரியர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். 


எளிமையானவராக இருந்தாலும் தப்பு செய்பவர்களுக்கு இவர் தயவு காட்டியதில்லை. நல்ல மனிதர் என்று அறிந்து எனது பள்ளி ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக, ஒருநாள் அவரை அழைக்கச் சென்றிருந்தேன்.உடனே மறுக்காமல் சம்மதித்து விட்டார். அதோடு மட்டும் அல்லாமல் உங்கள் பள்ளிக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எந்தப் பள்ளியாக இருந்தாலும் பரவாயில்லை மாணவர்களிடையே உரையாடுவதாக இருந்தால் போதும்,சிறப்பு விருந்தினராக எல்லாம் தேவையில்லை என்றும் கூறிவிட்டார். 

அதன் பிறகு, தென்காசி அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் சென்று மாணவ,மாணவிகளிடம் கலந்துரையாடினார். 

காவல்துறையில் இருப்பவர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைதால் கூட, தலையை எங்கே சாய்க்கலாம் என்றுதான் தோன்றும்.ஆனால் இவர் தனது ஓய்வு நேரத்தையே மாணவர்களுக்காக ஒதுக்கிக் கொண்டார்.மிகவும் சிறிய வயதில் ஐ.பி.எஸ் தேர்வெழுதி முதல் முறையே தேர்வாகி கரூரில் பணியில் அமர்ந்து, பின் தென்காசிக்கு வந்து எங்கள் ஊர் மக்கள் மனதில் இடம் பிடித்தவரும் இவரே என பத்திரிக்கையாளர்  அருள்மொழி செல்லையாவின் பதிவு செய்துள்ளார்.

 இப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடித்த அரவிந்தன் ஏனோ மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனதில் மட்டும் இடம் பிடிக்காமல் போய்விட்டார். காரணம் அவர் சராசரி ஐபிஎஸ் அதிகாரியாக இல்லாமல் இருந்தது தான். சட்ட மன்ற தேர்தலில் விருது நகர் மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடக்கவேண்டும் என மிகுந்த சிரத்தை எடுத்து செயல்பட்டார் அரவிந்தன். விளைவு தேர்தல் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாக போனது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தொகுதியில் மட்டுமே 27 வழக்குகள் பதிவு செய்தார். விடுவாரா அமைச்சர் நேரம் பார்த்துகொண்டிருந்தார். 


 மீண்டும் ஆட்சியமைந்தவுடன் முதலில் விருதுநகரில் களையெடுப்பு துவங்கியது. அதன் விளைவுதான் கட்டாயவிடுப்பில் செல்ல அரவிந்தன் நிர்பந்திக்கப்பட்டது.
இரண்டுவார விடுப்பு முடிந்தவுடன் மீண்டும் பணிக்கு வந்த எஸ்.பி. அரவிந்தனை அவரது அலுவலகத்துக்குள் நுழைந்த அமைச்சர் வெளியே அழைத்து வந்து நீங்கள் இருக்க தேவை இல்லை என திருப்பி அனுப்பியதாகவும் மீண்டும் எஸ்.பி விடுப்பில் சென்றதாகவும் அங்குள்ள போலீசார் குமுறுகின்றனர். 

 நேர்மையாக கடமையை செய்த அதிகாரிக்கு இதுதான் பரிசு என்றால் அப்புறம் எங்கே நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள் மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர். சட்டம் ஒழுங்கு எல்லாம் வெளியில் தான் , கட்சிக்கு அப்பாற்பட்டுத்தான் எல்லாம் என அரசியல் கட்சிகள் பார்ப்பதால் தான் அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர். 

நேர்மையாக தனது ஐபிஎஸ் வாழ்க்கையை துவக்கி ஏழை மாணவர்களை நேசித்த ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனுக்கு கசப்பான அனுபவமே. ஆனால் அவர் போல் பல அதிகாரிகள் உள்ளனர் எனபதை மனதில் கொண்டு அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கணும் என்று அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள், தமிழக மக்களும் தான்.

No comments:

Post a Comment