Wednesday 8 June 2016

கூலிப்படை கலாச்சாரத்திற்கு அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

“தமிழகத்தின் பொது அமைதிக்கும், சட்டம் –ஒழுங்கிற்கும் சவாலாக மாறிவரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  முகநூலில் பதிவு செய்துள்ளார். 


 சென்னை, சூளையில் பட்டப்பகலில் தகவல் உரிமை ஆர்வலர் பாரஸ்மால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை மாநகர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் சென்னை மாநகரில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும், போராடியும் வந்தவர் பாரஸ்மால். கட்டிட விதிமுறைகள் பற்றி போராடி வந்த இந்த தகவல் உரிமை ஆர்வலரின் கொலை தகவல் உரிமை சட்டத்திற்கே விடப்பட்ட சவாலாக அமைந்திருக்கிறது.

தகவல் உரிமை சட்டப்படி கேட்கப்படும் தகவல்கள் கொடுக்கப்படுவதில்லை என்றும், அப்படிக் கொடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில தகவல் ஆணையம் தவறி வருகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சமூக ஆர்வலர்கள்,சமூக நல அமைப்புகள் எல்லாம் இக்குற்றச்சாட்டை எழுப்பிவருகின்றன. பல்வேறு அரசு அலுவலகங்களில் “தகவல் அலுவலர்”பதவி கூட நிரப்பப்படாமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. 
இவற்றையும் மீறி கட்டிட விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை வெளிக்கொண்டு வர பாடுபடும் தகவல் உரிமை ஆர்வலர்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது. கொலை செய்யப்பட்ட பாரஸ்மாலுக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டும், இப்படி பட்டப் பகலில்அவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழக காவல் துறையின் திறமைக்கே சவாலாக அமைந்திருக்கிறது. 

சென்னையில் அடுத்தடுத்துகொலைகள் நடைபெற்று, கூலிப்படையினரின் அட்டகாசம் சென்னை மாநகரத்தில் மட்டுமின்றி,மதுரை உள்ளிட்ட மற்ற மாநகரங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. அதிமுக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்ற நாளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கூலிப் படையினரின் கொலை தினசரி செய்திகளாக வெளிவருகின்றன. தமிழக“கூலிப்படையினரை கண்காணிக்க”டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி.தலைமையில் தனியாக ஒரு பிரிவே(Organised Crime Unit) காவல்துறையில் இயங்குகிறது. இந்த பிரிவின்போலீஸ் அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். ஆனாலும் கூலிப்படையினரின் நடமாட்டம் குறித்தோ, ஆங்காங்கே நடக்கும் கூலிப்படைகளின் கொலை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுத்திருப்பது போல தெரியவில்லை.
நாளுக்கு நாள் பெருகி வரும் கூலிப்படைக் கலாச்சாரம் தமிழக மக்களை பீதியில் உறைய வைத்திருக்கிறது. கூலிப்படையினரின் கொலை வெறி பாரஸ்மால் போன்ற தகவல் உரிமை ஆர்வலரையும் விட்டு வைக்கவில்லை என்பது வேதனையாக இருக்கிறது. தேர்தல் பணிகள் முடிந்துள்ள இந்த நேரத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக தமிழக காவல் துறையை முடுக்கி விடவேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கூலிப்படையினரை சுற்றி வளைத்துப்பிடித்து, கூலிப்படை கொலைகளை உடனடியாக தடுக்க முன் வரவேண்டும்.        
 தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்
ளி வைப்பதோடு, இது போன்றகொலைகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அமைதியை விரும்பும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கிற்கும்,பொது அமைதிக்கும் சவாலாக மாறிவரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு முடிவுகட்டி பொதுமக்களின் அச்சத்தை போக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment