Sunday 5 June 2016

கல்வி கட்டண கொள்ளை - ராமதாஸ் அறிக்கை

மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (CBSE) பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க சி.பி.எஸ்.இ நிர்வாகம் அதிரடித் திட்டங்களை அறிவித்திருப்பதுடன் கடும் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறது. மாணவர் நலன் காக்கும் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழகத்தின் தனிப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது கல்விக் கட்டணக் கொள்ளை தான். மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியாக இருந்தாலும், மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளியாக இருந்தாலும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சாதாரணமான பள்ளிகளில் கல்விக் கட்டணமாக ரூ.50 ஆயிரமும், நன்கொடையாக சில லட்சங்களும் வசூலிக்கப்படும் நிலையில், சில புகழ்பெற்ற பள்ளிகளில் கல்விக் கட்டணமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இது தனியார் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்காக தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.

தனியார் பள்ளிகளின் இந்தக் கட்டணக் கொள்ளைக் குறித்து தமிழக ஆட்சியாளர்கள் இதுவரை கண்டு கொள்ளவில்லை.  பள்ளிக் கூடங்கள் சமுதாய சேவையாக நடத்தப்பட வேண்டுமே தவிர வணிக நிறுவனங்களாக நடத்தப்படக்கூடாது என்ற அறிவுறுத்தலுடன் தொடங்கும் சி.பி.எஸ்.இ அமைப்பின் செய்திக்குறிப்பில், ஆசிரியர்களுக்கான ஊதியம், பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட செலவுகளுக்காக மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மாணவர்களை சேர்க்க நேர்காணல் நடத்தக்கூடாது, நன்கொடை வசூலிக்கக்கூடாது; மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டத்தை மட்டுமே சி.பி.எஸ்.இ பள்ளிகளும் வசூலிக்க வேண்டும். கல்விக் கட்டணத்தில் பள்ளிச் செலவுகளை மேற்கொண்டது போக மீதமுள்ள நிதியை வேறு எந்த பணிகளுக்கும் திருப்பி விடக்கூடாது; பள்ளி வளர்ச்சிக்காக மட்டுமே செலவிட வேண்டும்; ஆண்டு தோறும் வரவு செலவுக் கணக்குகளை சி.பி.எஸ்.இ அமைப்பின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணத்தை கல்வியாண்டின் மத்தியில் அதிகரிக்கக்கூடாது; கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விதிகளை மீறி மாணவர்களிடம் நேர்காணல் அல்லது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் அதற்காக முதல் தடவை ரூ.25 ஆயிரமும், அடுத்தடுத்த தடவைகளில் ரூ.50 ஆயிரமும் தண்டமாக வசூலிக்கப்படும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கப்பட்டால், அதைவிட 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ எச்சரித்துள்ளது.

கல்விக்கட்டணம் தொடர்பான இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் பள்ளிகளில் வருவாய் குறித்து திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று சி.பி.எஸ்.இ எச்சரித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இதற்காக அதிகாரிகள் குழுக்களையும் மத்திய அரசு அமைத்திருக்கிறது. இவ்விதிகளை சி.பி.எஸ்.இ உறுதியாக பின்பற்றினால் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் கல்விக்கட்டணக் கொள்ளை என்பது இல்லாமலேயே போய்விடும். கல்விக் கட்டணக் கொள்ளையை சி.பி.எஸ்.இ நிர்வாகம் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும் நிலையில், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளில் நடைபெறும் கல்விக் கட்டணக் கொள்ளையை தமிழக அரசோ, பள்ளிக்கல்வித்துறையோ கண்டுகொள்ள மறுப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க சி.பி.எஸ்.இ நிர்வாகம் விடுத்துள்ள எச்சரிக்கை போன்று மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். அத்துடன் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் குறித்து பெற்றோர்களிடம் விசாரிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறதா? வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் பள்ளி சார்ந்த செலவுகள் தவிர மீதமுள்ள நிதி பள்ளி மேம்பாட்டுக்கு செலவிடப்பட்டுள்ளதா அல்லது வேறு பணிகளுக்காக திருப்பி விடப்பட்டிருக்கிறதா? என்பது பற்றி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு தணிக்கை மேற்கொள்ள வேண்டும். 

ஏதேனும் பள்ளிகளில் விதிமீறலோ, முறைகேடோ நடந்திருந்தால் அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது அப்பள்ளிகளை அரசுடமையாக வேண்டும். இதைச் செய்ய அரசு தவறினால் கல்விக்கட்டணக் கொள்ளையில் ஆட்சியாளர்களுக்கும் பங்கிருப்பதாகவே கருத நேரிடும். இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment