Monday 20 June 2016

கருணாநிதி என்று பெயர் சொல்லலாமா - சட்டசபையில் வாக்குவாதம்

கருணாநிதியின் பெயரை கூறியதால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு செம்மலை பேசியதற்கு  திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது, அதிமுக உறுப்பினர் செம்மலை பேசுகையில், கருணாநிதி முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளார் என்று பேசினார். 
சமஸ்கிருதத்தை எதிர்த்தவர், தனது பேரன்களுக்கு சமஸ்கிருதப் பெயர்களை சூட்டியுள்ளார்.மேகேதாட்டு அணை விவகாரம், முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்களின் போது கருணாநிதி எதுவும் செய்யாமல் மௌனமாகவே இருந்தார் என்று கூறினார். செம்மலை பேசுகையில் கருணாநிதி என்று பெயரைக் குறிப்பிட்டார்.
 இதனால் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.அப்போது பேசிய ஓ. பன்னீர்செல்வம், திமுகவும் மக்கள் நலக் கூட்டணியும் பொய்ப்பிரசாரத்தில் ஈடுபட்டன. பொய்ப்பிரசாரத்தை எதிர்த்து அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. கருணாநிதியைப் பற்றி அவரது பெயரை குறிப்பிடாமல் எப்படி பேசுவது என்று கேள்வி எழுப்பினார்.
 அப்படியானால், நாங்களும் முதல்வரை பெயர் சொல்லி அழைக்கலாமா என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது பேசிய அவைத் தலைவர் தனபால், எந்த பொறுப்பிலும் இல்லாத திமுக தலைவர் கருணாநிதியை பெயர் சொல்லி அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment