Monday 20 June 2016

கச்சத்தீவு பிரச்சனை சட்டசபையில் காராசார வாதம் - இடையூறு செய்யாமல் இருங்கள்- ஜெயலலிதா



கச்சத்தீவு பிரச்சனையில் சட்டசபையில் காராசார விவாதம் நடந்தது. கச்சத்தீவை கொடுக்கும் போது சும்மா இருந்த திமுக. இப்போது மட்டும் கேட்பதேன் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று 1991 ல் ஜெயலலிதா பேசியது பற்றி பொன்முடி பேசினார். இதற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

   இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோதுதான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

1974-லும், 1976-லும் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களைச் செய்துகொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அதை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்தினாரா? ஒன்றுமேயில்லையே.

முதலமைச்சரான 1991 முதல் இன்று வரை எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கச்சத்தீவை மீட்பதற்கு என்னால் முடிந்த நடவடிக்கைகளை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வகையில் நான் செய்துகொண்டுதான் இருக்கிறேன். நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். 

ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரே ஒரு ஆண்டுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்தது. அந்த நேரத்தில் தமிழகத்தின் சார்பில் நாங்கள் வைத்த எந்தக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கவில்லை என்பதால்தான் அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறினோம்.

 ஆனால், அந்த ஒரு ஆண்டை தவிர, மற்ற அனைத்து ஆண்டுகளிலும் மத்தியிலே காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி ஆனாலும் சரி, பி.ஜே.பி. தலைமையில் கூட்டணி ஆட்சி ஆனாலும் சரி, தி.மு.க. அதிலே அங்கம் வகித்தது. அப்போது நீங்கள் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களுடைய தலைவர் இங்கேயும் ஆட்சியில் இருந்தார், மத்தியிலும் ஆட்சியில் இருந்தார். 

அப்போது நான் சொல்வதைத்தான் பாரதப் பிரதமர் கேட்கிறார், என்னுடைய ஆலோசனைப்படிதான் பாரதப் பிரதமரே செயல்படுகிறார் என்று பெருமையாக மார் தட்டிக்கொண்ட  உங்கள் தலைவர் அப்போது ஏன் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, கச்சத் தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 அப்படி அத்தனை ஆண்டுகள் தூங்கிவிட்டு, இப்பொழுது திடீரென்று விழித்துக்கொண்டு Rip van winkle மாதிரி சட்டமன்றத்திற்கு வந்து, நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னைப் பார்த்துக் கேட்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

போராட்டம் ஆர்ப்பாட்டம் கடிதம் எழுதுவது எங்களுக்கும் தெரியும். நாங்களும் நடத்தியிருக்கிறோம் ஆனால் அதெல்லாம் பயன் தராது என்பதற்காக தான் நீதிமன்றத்திற்கு சென்றேன். ஏற்கனவே கிழக்கு பாகிஸ்தானுக்கு நிலம் கொடுத்த விவகாரத்தில் இரண்டு அவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தள்ளுபடியானது. 

அதே அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இதில் கட்டாயம் வெற்றி பெறுவோம். நீங்கள் இடையூறு செய்யாமல் இருங்கள். அதுவரை நீங்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.






No comments:

Post a Comment