Sunday 12 June 2016

திமுகவில் அதிரடி நீக்கம் தொடருமா? குமுறலில் புதிய மாவட்ட செயலாளர்கள்


 சட்டமன்ற தேர்தல் வெற்றி திமுக அதிமுகவுக்கு மட்டும் கிடைத்தது .மற்ற கட்சிகள் தோல்வியை தழுவின ஆனால் வெற்றியை இரண்டு கழகங்களும் ரசிக்கவில்லை. ஆட்சி கிடைத்தபோதும் கூடுதலான இடங்களில் வென்றிருக்கலாம் என்று அதிமுகவும் , கூடுதலாக இடத்தை வென்றிருந்தால் ஆட்சியையே பிடித்திருக்கலாம் என்று திமுகவும் யோசித்து வருகின்றன. 

அவரவர் பார்வையில் அது நியாயமாகத்தான் படுகிறது. இதற்கெல்லாம் காரணம் வாக்காளர்கள் என்பதைவிட சொந்தக்கட்சிக்காரர்கள் என்ற எண்ணமே இரண்டு தலைமையிடமும் உள்ளது. 

தேர்தல் முடிவுக்கு பிறகு இதை திமுக தலைவர் பகீரங்கமாகவே துரோகிகள் சூழ்ச்சி என்றே குறிப்பிட்டார். அதிமுக  தலைமையோ பேச்செல்லாம் கிடையாது . உடனடியாக உளவுத்துறை ரிப்போர்ட், கட்சிக்காரர்கள் புகார்  இவைகளை  வைத்து 20 மாவட்டசெயலாளர்கள் , கட்சி அணியின் நிர்வாகிகள் என ஒரு அதிரடி மாற்றத்தை கட்சிக்குள் செய்தார் ஜெயலலிதா. 


கட்சி தோற்றதற்கான காரணங்கள் திமுகவிலும் அலசப்பட்டன. அதிமுகவில் அதிரடி மாற்றம் வந்த பின்னர் திமுகவுக்கு நெருக்கடி உண்டானது. திமுகவில் களையெடுப்பு நடத்தாவிட்டால் அது உட்கட்சிப்பூசலை மேலும் அதிகமாக்கும் என்று முடிவு செய்த திமுக தலைமை கட்சி தோற்ற மாவட்டங்களில் சில மாவட்ட செயலாளர்களை நீக்கியது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான சீனியர் மாவட்டச்செயலாளர் காந்தி செல்வனின் நீக்கம் தான்.


 திமுகவின் இத்தகைய மாற்றங்கள் தொடருமா அல்லது இதோடு நின்றுவிடுமா என்பதுதான் தொண்டர்களின் கேள்வி. தி.மு.க., பின்னடைவை சந்தித்ததற்கு காரணமானவர்கள் என ஒரு பெரிய பட்டியலே தொண்டர்களால் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காட்டப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக, மூன்று மாவட்டச் செயலர்களை மாற்றி, தலைமை, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இதில் இரண்டு பேர்  புதிய மாவட்டசெயலாளர்கள்.

 2014 திமுக தலைமை நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை இரண்டு மூன்று என  பிரித்தது. பல மாவட்டங்களில் புதியவர்கள் பொறுப்புக்கு வந்தாலும் பத்து இருபது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் மூத்த  மாவட்ட செயலாளர்களும் தொடர்ந்தனர்.  இதில் சில மாவட்டங்களில் உட் கட்சி பூசல் காரணமாக செயலாளர்களை போடமுடியாமல் பொறுப்பாளர்களை நியமித்தனர்.  

தேர்தலில் செயல்படாத அல்லது கோஷ்டி அரசியல் நடத்தியது, தலைமை கொடுத்த பணத்தை பதுக்கியது, நல்ல வேட்பாளரை ஒதுக்கி பணம் பெற்று வேட்பாளர்களை நிறுத்தியது. டம்மி வேட்பாளர்களை நிறுத்தியது, வேலை செய்யாமல் ஒதுங்கியது, அதிமுகவுடன் கைகோர்த்தது என பல புகார்கள் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

புகார் அளிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களில் ஹிட் லிஸ்ட்டில் உள்ளவர்களில் மூத்த மாவட்ட செயலாளர்கள் பலர் அடக்கம் என தெரிவிக்கின்றனர்.  துாத்துக்குடி பெரியசாமி, நெல்லை ஆவுடையப்பன்,  கும்மிடிப்பூண்டி வேணு, ஆவடி நாசர், தஞ்சை ஏ.கே.எஸ்.விஜயன்,   குத்தாலம் கல்யாணம், முத்துசாமி,  சச்சிதானந்தன்,  சேலம் வீரபாண்டி ராஜா,  பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், சிவலிங்கம். மதுரையில் மணிமாறன்,  மூர்த்தி, வேலுசாமி,   கோ.தளபதி, தேனியில் மூக்கையா, ராமநாதபுரம்  சுப.த.திவாகரன், திருப்பூரில் பத்மநாபன் , செல்வராஜ் , கே.என்.நேரு, கோவை மாவட்ட செயலாளர்கள் , ஈரோடு மாவட்ட செயலாளர்கள் என 35 க்கும் மேற்பட்ட மா.செக்கள்  மீது கடுமையான ஆத்திரத்துடன் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.



புகார் கூறப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் கட்சியே காலியாகிவிடும் என திமுக தலைமை நினைக்கிறது. தற்போது கூட அதிமுகவில் நடந்த அதிரடி மாற்றம் காரணமாக திமுகவிலும் தொண்டர்களை திருப்தி படுத்தவே இந்த மாற்றம் என்கின்றனர் . மூன்று பேர் மீதான நடவடிக்கை எப்படி இருக்கிறது எதிர்ப்பு இருக்கிறதா அதிமுக பக்கம் தாவும் படலம் எதுவும் இருக்கிறதா என்பதை தலைமை கவனித்து அதன் பின்னர்தான் மேற்கொண்டு நடவடிக்கை வரலாம் என்று திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பாக்குவதை கண்டு புதிய மாவட்ட  செயலாளர்கள் கொதித்து போயுள்ளனர். 2014 ல் பொறுப்பை கொடுத்து இரண்டு ஆண்டில் நாங்கள் எப்படி மாவட்டத்தில் ரிசல்ட் காட்ட முடியும் இதில் மூத்த மாவட்டசெயலாளர்கள் செயல்பட விடாமல் தடுப்பது வேறு நடக்கிறது. பெயருக்குத்தான் மாவட்ட செயலாளர் ஆனால் எல்லா அதிகாரமும் அவர்கள் கையில் உள்ளது. இதில் எங்கே சுதந்திரமாக செயல்படுவது என்று புதிய மாவட்ட செயலாளர்கள் தரப்பில் கேள்வி எழுவதாக தெரிவிக்கின்றனர்.


நிதிப்பிரச்சனை புதிய மாவட்ட செயலாளர்களுக்கு பெரும் பிரச்சனை. மாவட்ட செயலாளராக வருவதற்கு செலவு, வந்த பின்னர் கூட்டங்கள் , இயக்கங்களுக்கு செலவு, பாராளுமன்ற தேர்தல் , நமக்கு நாமே பயணச்செலவு , சட்டசபை தேர்தல் என செலவுக்கு மேல் செலவு செய்துள்ளோம் இப்போது எங்கள் மீதே நடவடிக்கையா? என்ற குமுறல் ஒரு புறம் உள்ளது.

எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவர் தலைமையில் , அதிகார மையம் இயங்கியதே அவர்கள் தானே அனைத்தையும் தீர்மானித்தார்கள் தோல்விக்கு அவர்களை பொறுப்பாக்குவதுதானே முறை என்ற வாதமும் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக போல்  துணிந்து அதிரடியாக திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா? மூத்த மாவட்ட செயலாளர்களால் கட்சி தோற்ற இடங்களில் நடவடிக்கை எடுக்க துணிவு இருக்கிறதா?  என்றெல்லாம் இளம் மாவட்டசெயலாளர்கள் எண்ணமாக உள்ளது.


சட்டசபை தேர்தல்   , எதிர்கட்சித்தலைவர் தேர்வு , ராஜ்யசபா எம்பி தேர்வு வரை கட்சித்தலைமைக்குள்ளேயே ஏகப்பட்ட மோதல் இருக்கும் போது இதில் எல்லாம் எங்கே கவனம் செலுத்த முடியும் என்ற வாதமும் திமுகவுக்குள் எழுகிறது. அதிரடி ஆரம்பமா அல்லது  அறிக்கையோடு முடிந்து விடுமா என்று அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment