Tuesday 7 June 2016

சகாயம் கமிட்டி அறிக்கை சிபிஐ விசாரணைக்கு விடலாமா? - அனைத்து துறைகள் அறிக்கை தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் அதிகாரியின் அறிக்கை மீது சிபிஐ விசாரணையா? சிபிசிஐடி விசாரணையா என முடிவு செய்ய அனைத்து துறைகள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


     கடந்த 2014 ஆம ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல வழக்கில், மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி, தமிழகத்தில் சட்டவிரோத கனிம வளக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
 இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சகாயம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகாரிகள் துணையுடன் கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாகவும், அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.


    இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரவதனம், ‘மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிக்கை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆகிவிட்டதால், அதனை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.
 அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி-க்கு உத்தரவிடுவதா? அல்லது சிபிஐ-க்கு உத்தரவிடுவதா? என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசு சார்பிலும் ஒரு அறிக்கை தாக்கல் செய்வதாக கூறப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தாக்கல் செய்யும் அந்த அறிக்கைக்குப் பிறகே இந்த வழக்கை யாரிடம் ஒப்படைப்பது என முடிவு செய்யப்படும். இருந்தாலும் இதுகுறித்து சிபிஐ-யும் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை இன்றைய தேதிக்கு தள்ளி வைத்தனர்.
   

அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி கவுல், நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் எம். ராதாகிருஷ்ணன் ஆஜராகி, இந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த மேலூர் கோர்ட்டு நீதிபதி மகேந்திர பூபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் தீவிரம் கருதி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.     அப்போது அரசு தலைமை வக்கீல் சோமையாஜி ஆஜராகி, இதுதொடர்பாக, இரண்டு துறைகள் விரிவான அறிக்கை தயார் செய்துள்ளது. மற்ற துறைகளின் அறிக்கை தயாராக மேலும் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள், வழக்கை நான்கு வாரத்துக்கு தள்ளி வைக்கிறோம். அதற்குள் தமிழக அரசு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய கூட்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகே, இந்த வழக்கில் முடிவு எடுக்க முடியும். மேலும், சிபிஐ தரப்பும் பதில் மனு தாக்கல் செய்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

No comments:

Post a Comment