Wednesday 29 June 2016

ஸ்வாதி கொலை நடந்த இடத்தில் போனது இன்னொரு உயிர் - ரயில்வே போலீசின் அலட்சியம் என மகன் புகார்


சுவாதி கொலையான அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். உயிருக்கு போராடிய அவருக்கு முதலுதவி அளிக்கவில்லை என்று அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் நிறுவன ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். கொலை நடந்த  அன்று அவரது உடல் ரத்தவெள்ளத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே கிடந்தது. ரயில் நிலையத்தில் வரும் பயணிகள் பயத்துடன் உடலை பார்த்து சென்றனர்.

உடலை மூடக்கூட வெகு நேரமாக போலீசார் முயற்சி எடுக்க வில்லை. (பின்னர் அதை நீதிமன்றமே கண்டித்தது). இது போல் அங்கு வழக்கமாக வேலைக்கு செல்லும் முதியவர் ஒருவர் ஸ்வாதியின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கேயே நெஞ்சுவலியால் துடித்துள்ளார்.பின்னர் இறந்து போனார்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த  ஆதிகேசவன்(70). வால்டாக்ஸ் சாலையில் ஸ்டீல் பட்டறையில் வேலை செய்து வந்தார்.  கடந்த 30  ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தினமும் காலை 8-30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து  சென்னை சென்ட்ரலுக்கு செல்வார்.

கொலை நடந்த அன்றும்  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு  கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுவாதியின் உடலை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த  ஆதிகேசவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

அப்படியே சுவற்றில் சரிந்து உட்கார்ந்துள்ளார். வாயிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. ஆனால் அங்கிருந்த களோபரத்தில் ரயில்வே நிர்வாகமோ போலீசாரோ அவருக்கு முதலுதவி அளிக்க முன் வரவில்லை. அதன் பின்னர் அவரது மகனுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அவர் வந்து அப்பாவின் நிலையை பார்த்து அருகிலுருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  ரயில்வே போலீசார் உயிருக்கு போராடிய என் தந்தைக்கு எந்த முதலுதவியும் அளிக்கவில்லை என்று அவரது மகன் கோதண்டராமன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், "சுவாதி இறந்த போன இடத்தின் அருகிலேயே என் தந்தையும் இறந்து விட்டார். சுவாதியின் உடலை பார்த்ததால் அதிர்ச்சியில் அங்கேயே என் தந்தை இறந்து விட்டார்.  நெஞ்சுவலியால் துடித்து கீழே விழுந்த என் தந்தைக்கு ரயில்வே போலீசார் முதலுதவி சிகிச்சையும் அளிக்காமல் விட்டு விட்டனர். வாயில் வழிந்த ரத்தத்தை கூட துடைக்கவில்லை இதுதான் இவர்கள் லட்சணம்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் ஒரு ரயில் நிலையத்தில் இதுபோன்று மருத்துவ வசதி அளிக்க ரயில்வே துறை எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. ரயில் நிலையங்களில் சாலையோர கடைகள் அதிகளவில் இருக்கிறது.  ஆனால் மருத்துவ உதவிகள் வழங்க எந்த வகையிலும் வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதனை ரயில்வே துறை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment