Wednesday 29 June 2016

பேசிக்கிறாங்க ,.... சிக்கலில் அதிகாரி ..



ரொம்ப நாள் கழித்து அந்த கோட்டை வட்டாரத்து உயர் அதிகாரியை சந்தித்தேன். வாய்யா எப்படி இருக்கே என்றார் . நல்லா இருக்கேன் சார் என்றேன் . நீ என்ன உள்ளடி வேலையா செஞ்ச நிம்மதி இல்லாம இருக்கறதுக்கு என்றார் . ஏன் பொடி வைத்து பேசுகிறீர்கள் யார் சிக்கியது என்றேன் . 

கரெக்டா பாயிண்ட புடிப்பேய்யா , உங்க எட்டாவது மாடியில் ஒரு கருப்பாடு சிக்கி இருக்கு தெரியுமா என்றார் . யார் சார் அது என்றேன் . சொல்கிறேன் உனக்கே கடைசியில் புரியும் என்றார் .

தமிழக காவல்துறையில் சென்னையிலேயே காலம் தள்ளிய அதிகாரிகள் சிலரே . அதிலும் முக்கியமான இடத்தில் தலைநகரத்தின் சட்டம் ஒழுங்கை  தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதென்றால் அதற்கு தனி சாமர்த்தியம் வேண்டும் . 
அதை முழுமையாக கற்றவர் அந்த அதிகாரி . 

பிளாக்‌ஷிப் என்று இப்போது மேலிடத்தில் அழைக்கிறார்கள் நாமும் அப்படியே இவரை அழைக்கலாமா . திமுக ஆட்சியில் அந்த புறநகர் ஆணையரிடம் விசுவாசமான அதிகாரியாக இருந்தவர் பின்னர் ஆட்சி மாறியதும் 2011 க்கு பிறகு புறநகர் ஆணையரகம் கலைக்கப்பட்ட போது தூக்கி அடிக்கப்பட்ட பலரில் இவரும் ஒருவர்.

அதன்பின் சென்னை திரும்பும் இவரது கனவு பழங்கனவானது. அந்த நேரம்தாம் இவருக்கு ஒரு யோகம் அடித்தது. இவர் இருந்த அதே ஊருக்கு இவரது மேலதிகாரியாக வந்த  அந்த அதிகாரி . அந்த மன்னரின் அபிப்ராயத்தை பெற்றார். 

திடீரென சென்னையில் இஸ்லாமியர்கள் பிரச்சனையில் சென்னையின் உச்ச அதிகாரி மாற்றப்பட்டு மன்னரின் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் சென்னை வந்தது , விடுவாரா மன்னர் உடனே மேலே பேசி தனக்கு வேண்டிய முக்கிய இடத்தில் இவரை   வைத்து கொண்டார். 

அதன் பிறகு இவர்கள் வைத்ததுதான் சட்டம் . இதில் சென்னையில் இவர் செய்த வேலைகளை எழுத தனி அத்யாயம் எழுதணும் அது தனிக்கதை பிறகு எழுதுவோம். 
இப்ப மேட்டர் இவர் எப்படி சிக்கினார் என்பதே. சென்னையில் எட்டுமாடியில் அமர்ந்தவுடன் அண்ணன் தனக்கு செகன்ட் இன்னிங்க்ஸ் கொடுத்தவுங்களுக்கு விசுவாசமாக இருந்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.

ஆனால் செய்யலையே ஐந்தாண்டுகளாக யாருக்கு விசுவாசமாக இருந்தார் என்னென்ன செய்தார் என்பது தனிக்கதை. இப்ப அதுவல்ல மேட்டர். இவர் வந்து அமர்ந்தவுடன் முன்னாடி இவர் இருந்த இடத்தில் இருந்த ஒரு விசுவாசமான  ஒரு காவலரை இவருக்கு தோதா வைத்து கொள்கிறார். 

அதேபோல் மேலும் மூன்று ஆட்களை தனக்கு தோதாக  மாநில மன்னர்கள்  ஆளும் கட்டிடத்திலேயே வைத்து கொள்கிறார்.  பிறகு என்ன அரசாங்கம் இவருக்கு கொடுத்த வேலையை அரசாங்கத்துக்குள்ளேயே பார்க்கிறார். என்னென்ன தகவல் வேண்டுமோ அத்தனையும் எடுக்கிறார். 

வேண்டியபட்டவர் மூலம் எதிரணிக்கு அது போகுது. கோட்டை வட்டார ஆட்களுக்கே அது தெரியாமல் செய்தது தான் இவரது ஸ்பெஷாலிட்டி. ஒரு கட்டத்தில் தகவல்கள் எப்படித்தான் கசிகிறது என்று தோண்டுகிறார்கள், ஆனால் இவருக்கு வேண்டிய ஆட்களே அங்கும் இருந்ததால் அம்மா ஒன்றுமில்லை அம்மான்னு சொல்லி விடுகிறார்கள். 

ஆனால் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு முதல் நீர்பாசனத்துக்கு அணை திறப்பு வரை அரசின் அத்தனை தகவல்களும் கசிகிறது. மேலிடம் கொதிக்கிறது. கடைசியில் ஆட்சி முடியும் தருவாயில் தான் முக்கிய உயர் அதிகாரி மூலம் விஷயம் வெளியே தெரிய வருகிறது.மேலிடத்துக்கு தகவல் போகிறது. 

அதே நேரம் எட்டாவது மாடிக்கும் மேலிடத்துக்கு வேண்டிய அதிகாரியே வந்துவிட இவர் கண்காணிக்கப்படுகிறார். ஓரங்கட்டப்படுகிறார். இதில் ஹைலைட் இவருக்கு தோதாக இருந்த நான்கு சாதாரண ஆட்களை மேலிடமே தூக்க சொல்ல உளவுத்துறை உயர் அதிகாரி எட்டாவது மாடி தலைவரை கூப்பிட்டு மேலிட தகவலை சொல்லி  4 பேரும் மாற்றப்படுகின்றனர்.

 அரண்மணையிலிருந்து தூக்கி அடிக்கப்படுகின்றனர். 
இப்ப செய்வதறியாது திகைத்து நிற்கிறார் இவர். கூடிய விரைவில் இவரும்  தூக்கி அடிக்கப்படுவார் அது எவ்வளவு தூரம்னு தெரியாது என்றார்  அவர்.  சார் இதெல்லாம் நடக்க கூடிய விஷயமா என்றேன். நீ வேண்டுமானால் பார் என்ன நடக்குதுன்னு என்றார். பெரும்பாலும் அவர் சொன்னால் தப்பாது என்பதால் எதிர் கேள்வி கேட்காமல் விடை பெற்றேன்.

No comments:

Post a Comment