Thursday 30 June 2016

செல்பி மோகம் பதவி போச்சு



பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுடன் செல்பி எடுத்த ராஜஸ்தான் மகளிர் ஆணைய உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளார். -- Muthaleef

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் வடக்கு மாவட்டத்தில்  கணவன் மற்றும் இரண்டு சகோதரர்களால் பாலியல் வன்முறைக்கு இரையாக்கப்பட்டு பின்னர் கையில் பச்சை குத்தப்பட்டு   துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை மஹாலியா காவல் நிலையத்தில் பார்க்க சென்ற ராஜஸ்தான் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜர் அந்த பெண்ணுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். 


அவருடன் ஆணைய தலைவி சுமன் ஷர்மாவும் உடனிருந்தார். இந்த விவகாரம் புகைப்படமாக வாட்ஸ் அப்பில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகியது. இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் அவர்கள் மீது விளக்கம் கேட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து முதல்வர் வசுந்தரராஜேவை சந்தித்த சோம்யா குர்ஜர் தனது ராஜினாமாவை அளித்தார். சோம்யா குர்ஜரும், தலைவி சுமன் சர்மாவும் ஜூலை 4 அன்று தம்முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேசிய மகளிர் ஆணைய தலைவி உத்தரவிட்டுள்ளார்.


தான் பாதிக்கப்பட்ட பெண் கேட்டு கொண்டதன் பேரிலேயே படம் எடுத்து கொண்டதாகவும், தன்னால் பிரச்சனை வரக்கூடாது எனபதால் முதல்வரிடம் ராஜினாமாவை அளித்ததாக தெரிவித்துள்ள குர்ஜர், படம்பிடித்து வாட்ஸ் அப்பில் போட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment