Thursday 30 June 2016

FLASH- வருகிறது ஐபிஎஸ் மெகா டிரான்ஸ்பர் - முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகம் விமர்சனத்துக்க்குள்ளாகி வருகிறது. தினம் ஒரு கொலை , கொள்ளை செயின் பறிப்பு கூலிப்படை அட்டகாசம் என பொதுமக்கள் அச்ச உணர்வுடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் சட்டசபையில் அறிவித்தாலும் நடைமுறையில் பல பிரச்சனைகள் எழுந்து தமிழக அரசு கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இதற்கு முத்தாய்ப்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஸ்வாதியின் கொலையில் இதுவரை கொலைக்கான காரணத்தை கூட போலீசார் கண்டுபிடிக்காததும் , கொலை விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பாக பேசப்படும் விவகாரமாக மாறியுள்ளதும் குறிப்பிடதக்கது.

இதன் விளைவு உயர்நீதிமன்றமும் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது. இன்று காலை டிஎஸ்பி விஷ்ணு பிரியா மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது பெரும் பின்னடைவாக தமிழக முதல்வர் கருதுகிறார்.

இதையொட்டி தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து நேற்று முதல்வர், தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும் அதில் முதல்வர் தனது அதிருப்தியை தெரிவித்ததையும் பதிவு செய்திருந்தோம்,.

நேற்று மாலையும் இதே போல் ஆலோசனை கூட்டம் முதல்வர் இல்லாமல் அதே அதிகாரிகள் நடத்தினர். இதனிடையே இன்று முதல்வர் தலைமையில் மீண்டும் தலைமைசெயலர், உள்துறை செயலர் , டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடக்கிறது.

இதில் டிஎஸ்பி விஷ்ணு பிரியா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது , ஸ்வாதி கொலை விவகாரம்  மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் முடிவு செய்துள்ள நிலையில் இந்த பிரச்சனையை அடுத்து பெரிய அளவில் ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர் செய்ய முதலவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்ட முடிவில் இன்று ஐபிஎஸ் டிரான்ஸ்பர் வெளியாகலாம். இது மிகப்பெரிய அளவிலான மாற்றமாக இருக்கும் என கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment